மீண்டும் மோடி சர்க்கார்! பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்த வார இறுதியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் ‘மீண்டும் ஒரு முறை மோடி சர்க்கார்’ என்ற தேர்தல் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலின் வரிகள் 24 இந்திய பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
மோடி அரசின் ஆட்சியில் பல்வேறு துறைகள், பிராந்தியங்கள் மற்றும் வெவ்வேறு சமூகத்தினரின் வளர்ச்சியை எடுத்துரைக்கும் விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
‘மீண்டும் மோடி சர்க்கார்’ என்பது பாஜகவின் பிரச்சார முழக்கமாக கடந்த ஜனவரியில் மாதமே தேசியத் தலைவர் ஜேபி நட்டாவால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பாடல் வெளியீட்டின் மூலம் பாஜக டிஜிட்டல் தளங்களில் தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பாடலுக்காக https://www.ekbaarphirsemodisarkar.com/ என்ற இணையதளத்தையும் பாஜக தொடங்கியுள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பாஜகவின் தேசிய மாநாட்டின் நிறைவு நாளில் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சி அரசு எடுத்த துணிச்சலான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட முடிவுகளுக்கு சாட்சியாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக நிலுவையில் இருந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன” என்றார்.
“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதன் மூலம் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கனவையும் ஆசையையும் நிறைவேற்றினோம். ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ என்ற கோரிக்கையும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டது என்று பிரதமர் மோடி கூறினார். பெண் சக்தியின் முக்கியத்துவத்தை விரிவுபடுத்தும் வகையில், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட சட்டம் நிறைவேறியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.