பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் மோடி தான்! கருத்துக்கணிப்பில் 64% மக்கள் விருப்பம்
பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் யார் என்ற கருத்துக்கணிப்பில் 64% பேர் நரேந்திர மோடியையே முதன்மையாகத் தேர்வு செய்துள்ளனர். 17% பேர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கான முதன்மைத் தேர்வாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். 19% பேர் வேறொருவர் பிரதமராக வருவதை முதன்மைத் தேர்வாகக் கூறியுள்ளனர்.
அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று மக்கள் கருத்தை அறிய தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பிரதமராகத் தகுந்தவர் என்று தாங்கள் நம்பும் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வுசெய்யும்படி கேட்டபோது, 19% பேர் ராகுல் காந்தியை விரும்பியுள்ளனர். 15% பேர் மம்தா பானர்ஜியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மேலும், 12% பேர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், 6% பேர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், 8% பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த உத்தவ் தாக்கரேவையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் கணக்கெடுப்பில் 40% பேர் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்கள் என்று தாங்கள் கருதுபவர்களில் ‘மேலே குறிப்பிட்ட யாரும் இல்லை’ என்று கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த மாத தொடக்கத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி, மக்களவைத் தேர்தலுக்கான உத்தேச தேதி ஏப்ரல் 16 என்று கூறினார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி முடிவடைந்தது. 67 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
மே 23ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 91 இடங்களப் பெற்றது. மற்ற கட்சிகள் 98 இல் வெற்றி பெற்றனர்.