தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு மோடி போட்ட கட்டளை! 15 நிமிட சந்திப்பில் பேசியது என்ன?
சென்னை: தமிழக பாஜக நிர்வாகிகளை நேற்றிரவு சந்தித்து பேசிய பிரதமர் மோடி அவர்களுக்கு முக்கிய கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, நேற்றிரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். அங்கு தமிழக பாஜக நிர்வாகிகள் சிலருடன் 15 நிமிடங்கள் வரை ஆலோசித்த அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆர்வமுடன் கேட்டறிந்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் ஒவ்வொரு நிர்வாகியும் மிக கடுமையாக உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறார்.
குறிப்பாக கிராமப்புற மக்களிடம் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்தெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என தன்னை சந்திக வந்த நிர்வாகிகளிடம் வலியுறுத்தி சொல்லியிருக்கிறார். கூட்டணி விவகாரம் குறித்து இந்தச் சந்திப்பின் போது பிரதமர் மோடி பெரிதாக பேசவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க பாஜக நிர்வாகிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எந்த வகையில் எல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை பற்றியே 10 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.
இந்தச் சந்திப்பில் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட மிக முக்கிய நிர்வாகிகள் 15 பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வரும் 25ஆம் தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளை சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடவுள்ள தகவலை கூறினார்.
இதனிடையே இனி வரும் நாட்களில் அமித்ஷா, நட்டா உள்ளிட்ட பாஜக மேலிட முக்கியப் பிரமுகர்கள் பலர் தமிழ்நாட்டுக்கு வருவார்கள் என்றும் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அவர்களும் கலந்துரையாடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமருடனான சந்திப்பின் போது தமிழக பாஜக நிர்வாகிகள் அதிமுக பற்றி பேசியதாக கூறப்பட்டாலும் என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.