Mohammed Shami: சுப்மன் கில்லுக்கு சிக்கல், ஷமி விலகல் – டி20 உலகக் கோப்பைக்கும் டவுட் தானாம்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை மேல் சாதனை படைத்தார். உலகக் கோப்பையில் சிறந்து விளங்கிய நிலையில் மத்திய அரசின் சார்பில் அர்ஜூனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதன் பிறகு நடந்த ஆஸ்திரேலியா டி20 தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்று எதிலேயும் ஷமி இடம் பெறவில்லை, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் உடல் தகுதி பெறாத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் ஷமிக்கு காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகாத நிலையில், அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் 17ஆவது ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்து தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் சீசனில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமி, கடந்த சீசனில் மட்டும் 28 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.