இடியை இறக்கிய முகமது ஷமி.. மிரண்டு போன பிசிசிஐ.. இக்கட்டான நிலையில் ரோஹித் சர்மா
முகமது ஷமி இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் குறித்து வந்துள்ள தகவலால் பிசிசிஐ கவலையில் ஆழ்ந்து உள்ளது. அவரை உடனடியாக இங்கிலாந்துக்கு அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் துவங்க உள்ளது. அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை மட்டுமே பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. முகமது ஷமிக்கு கணுக்காலில் காயம் இருப்பதால் அதை குணமாக்க தேவையான கால அவகாசத்தை அளித்து இருந்தது பிசிசிஐ.
முகமது ஷமி 2023 உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த கிரிக்கெட் போட்டியிலும் இதுவரை பங்கேற்கவில்லை. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கூட அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்த்த நிலையில், அதிலும் முதல் இரண்டு போட்டிகளில் அவரால் ஆட முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், கடைசி மூன்று போட்டிகளில் அவரால் ஆட முடியுமா? என பரிசோதிக்க முகமது ஷமி தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைக்கப்பட்டு இருந்தார்.
அங்கே அவரை சோதித்த மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் அவரது காயம் இன்னும் குணமாகவில்லை என்பதை அறிந்தனர். இனியும் தாமதம் செய்தால் அவரால் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் நடக்க உள்ள ஐபிஎல், டி20 உலகக்கோப்பை தொடர் என எதிலும் பங்கேற்க முடியாமல் போகும். இதை உணர்ந்த பிசிசிஐ அவரை அவசர அவசரமாக இங்கிலாந்தில் விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவரிடம் அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது.
முகமது ஷமி இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றால். ஒரு புறம் பும்ரா, மறுபுறம் ஷமி பந்து வீசுவார்கள். இந்த ஜோடியிடம் எப்பேர்பட்ட அணியாக இருந்தாலும் அடங்கித் தான் போக வேண்டும். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடி ஆட்டம் ஆடும் இங்கிலாந்து அணி, ஷமியின் பந்துவீச்சில் பவுண்டரி அடிக்க நினைத்தால் விக்கெட்டை இழக்க நேரிடும். 2023 உலகக்கோப்பை தொடரில் அதுதான் நடந்தது. எனவே, முகமது ஷமி இல்லாமல் கேப்டன் ரோஹித் சர்மா இக்கட்டான நிலையில் இருக்கிறார். டெஸ்ட் அணியில் இது நிச்சயம் பின்னடைவு தான்.