இலங்கையை போன்றே தென் ஆப்ரிக்கா அணியையும் வேட்டையாடிய முகமது சிராஜ். வெறும் 55 ரன்களில் ஆல் அவுட்டானது தென் ஆப்ரிக்கா !!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா அணி வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் இன்று (3-1-24) துவங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு துவக்கமே மிக மிக மோசமாக அமைந்தது. அந்த அணியின் முதல் நான்கு வீரர்களும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் தென் ஆப்ரிக்கா அணி 15 ரன்களுக்கே தனது 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்தடுத்து களமிறங்கிஅ வீரர்களில் டேவிட் (12) மற்றும் கெய்ல் வெர்ரேன் (15) ஆகிய இருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் 23.2 ஓவரில் 55 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி ஆல் அவுட்டானது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதே போன்று முகேஷ் குமார் மற்றும் பும்ராஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.