சிவாஜி பட பாணியில் சாலையில் பறந்த ரூபாய் நோட்டுகள்!! சந்தோஷத்தில் மணமகன் செய்த காரியம்!
ஹரியானாவில் புதியதாக திருமணமான மணமகன் ஒருவர், விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் (Mercedes-Benz C-Class) காருக்குள் இருந்தப்படி சந்தோஷத்தில் பண நோட்டுகளை சாலையில் வீசியுள்ளார். எதற்காக அவர் இவ்வாறு செய்தார்? எங்கு இந்த சம்பவம் நடந்தது? இதற்கு போலீஸார் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை பற்றி முழுமையாக இனி பார்க்கலாம்.
பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் காரணத்தினாலேயே டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் அவ்வப்போது விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அந்த வரிசையில், சில தினங்களுக்கு முன்பு திருமணமான மணமகன் ஒருவர் அவரது நண்பர்களுடன் சாலையில் பல்வேறு சொகுசு கார்களுடன் ஆர்பரித்தப்படி ஊர்வலமாக சென்றுள்ளார்.
அப்போது திடீரென, தான் சென்றுக் கொண்டிருந்த விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் காரின் மேற்கூரையை திறந்து வெளியே வந்த மணமகன் சந்தோஷத்தில் தான் கையில் வைத்திருந்த கட்டுக்கட்டான ரூபாய் நோட்டுகளை சாலையில் வீச ஆரம்பித்துள்ளார். இதனை கண்ட சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் ரூபாய் நோட்டுகள் பறந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், மணமகனின் பென்ஸ் காருக்கு அருகில் ஜாகுவார், ஆடி கார்களில் அரண் போல் சென்ற மணமகனின் நண்பர்களும், உறவினர்களும் மணமகன் ரூபாய் நோட்டுகளை வீசுவதை கண்டு உற்சாகத்தில் கூச்சலிட ஆரம்பித்தனர். அத்துடன், பறந்துவரும் ரூபாய் நோட்டுகளை பிடிக்கும் முயற்சியாக அவர்கள் தங்களது கார்களின் ஜன்னல் மற்றும் சன்ரூஃப் வழியாக வெளியே வருவதையும் இந்த நிகழ்வு தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காண முடிகிறது.
இந்த ஊர்வலத்தில் எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா ஸ்கார்பியோ என மற்ற கார்களையும் காண முடிகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த மணமகன் ஊர்வலத்தில் ஈடுப்பட்ட அனைத்து கார்களும் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்தில் இருந்தன. இந்த கார்கள் அனைத்திலும் வெள்ளை நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதால், இவை இந்த நிகழ்விற்காகவே வாடகைக்கு வாங்கப்பட்டவை கிடையாது. அனைத்தும், பிரைவேட் கார்கள்.
ஒருவரது குடும்பத்தில் இத்தனை சொகுசு கார்கள் இருப்பது ஒன்றும் ஆச்சிரியமில்லை. ஆனால், இவை அனைத்தும் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்தில் இருப்பதுதான் சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதைவிட ஆச்சிரியம் என்னவென்றால், நெடுஞ்சாலையில் ரூபாய் நோட்டுகளை மணமகன் வீசியதுதான். இந்த ரூபாய் நோட்டுகள் உண்மையானவையா அல்லது போலியானவையா என்பது தெரியவில்லை.
ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறுவது ஒன்றும் புதியது அல்ல. ஆனால், அதில் சில சம்பவங்களில் போலியான ரூபாய் நோட்டுகள் பொது வெளியில் வீசப்பட்டு இருந்தன. ரூபாய் நோட்டுகள் பறந்துவருவதை கண்டு ஆச்சிரியத்துடன் அவற்றை பிடித்து பார்த்த மக்கள் அவை போலியானவை என தெரிந்தவுடன் அங்கிருந்து வசைப்பாடியப்படி சென்ற சம்பவங்களை இதற்கு முன் பார்த்துள்ளோம்.
ஆனால், சில சமயங்களில் உண்மையான ரூபாய் நோட்டுகளும் வீசப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் மால்வியா நகர் என்ற பகுதில், பிரபலமான மனி ஹீஸ்ட் வெப் சீரிஸின் உடையில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த மக்களை அழைத்து அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை வீச ஆரம்பித்தார். அவையாவும் உண்மையான ரூபாய் நோட்டுகள் ஆகும். ஆனால், அவையாவும் 10, 20 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.