கர்நாடகாவில் வேகமாக பரவிவரும் குரங்கு காய்ச்சல்… மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலைத் தடுக்க அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கர்நாடகாவில், உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 154 பேருக்கு பரிசோதனை செய்த நிலையில், உத்தர கர்நாடகாவில் ஒருவருக்கும், சிக்கமகளூருவில் இருவருக்கும் என 3 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே 38 பேர் குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மேலும் மூன்று பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 25 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை 18 வயது இளம்பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இதேபோன்று, கேரள மாநிலத்தில் கர்நாடக எல்லையோரம் உள்ள மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.