ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்த கியா செல்டாஸ் கார்… அப்படி என்ன இதுல ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் SUV கார்களில் ஒன்றாக கியா செல்டாஸ் (Kia Seltos) திகழ்கிறது. 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட செல்டாஸ் கார், கடந்த வருட ஜூலை மாதத்தில் முதலாவது ஃபேஸ்லிஃப்டை பெற்றது. அறிமுகமானதிலிருந்தே செல்டாஸ் ஃபேஸ்லிஃப்ட் மக்களின் வரவேற்பை பெற்று வருவதோடு, தற்போது வரை ஒரு லட்சம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தோராயமாக 13,500 செல்டாஸ் கார்கள் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டன.
இதுவரை இந்தியாவில் 6 லட்சம் செல்டாஸ் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதில் ஏறக்குறைய 75 சதவிகித கார்கள் உள்நாட்டு சந்தையிலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1.04 லட்சம் மிட் சைஸ் SUV கார்களை விற்பனை செய்திருந்தது கியா மோட்டர்ஸ். தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலில், முந்தைய கார்களில் இருந்ததை விட புதிய பவர்ட்ரைய்ன் ஆப்ஷன்களும், வடிவமைப்பு மாற்றங்களும், கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக லெவல் 2 ADAS உள்பட 17 பாதுகாப்பு வசதிகளும் ஃபேஸ்லிஃப்ட் செல்டாஸ் காரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய செல்டாஸ் காரின் வெற்றி எங்களுக்கு பெரிய உற்சாகத்தை தந்துள்ளது. இப்போது சந்தையில் கிடைக்க கூடிய கார்களில் மிகவும் ஸ்மார்ட்டான SUV கார் என்றால், நிச்சயம் அது செல்டாஸாக மட்டுமே இருக்க முடியும். இதற்கு வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே சாட்சியாக இருக்கிறது. மிட் சைஸ் SUV பிரிவில் எங்களது சந்தை பங்களிப்பை அதிகரிக்க புதிய செல்டாஸ் மிகவும் உதவியாக இருக்கிறது என்கிறார் கியா இந்தியாவின் தலைமை விற்பனை மற்றும் பிசினஸ் அதிகாரி மையூங் சிக் சோன்.
கியா செல்டாஸ் காரின் முன்பதிவு நிலவரங்கள்
முன்பதிவு செய்யப்பட்டுள்ள செல்டாஸ் கார்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலானவை ஆட்டோமெட்டிக் மாடலாகும். வாடிகையாளர்கள் தங்களுக்கு சௌகர்யமானதையே அதிகம் விரும்புகிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள் குறித்து தற்போது எல்லாரும் விழிப்புணர்வு பெற்றுவிட்டதால், 40 சதவிகிதத்திற்கும் மேலானோர் ADAS வசதியுள்ள கார்களையே தேர்வு செய்துள்ளனர் என கியா நிறுவனம் கூறியுள்ளது.
அதேப்போல் சன்ரூஃப் உள்ள கார்களையே இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்பதும் செல்டாஸ் கார் முன்பதிவில் பார்க்க முடிந்தது. இந்தக் காரை முன்பதிவு செய்துள்ளவர்களில் 80 சதவிகிதத்திற்கும் மேலானோர் சன்ரூஃப் வசதியை தேர்வு செய்துள்ளார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் முன்பதிவு விகிதமும் 58:42 என்ற அளவில் ஆரோக்கியமான நிலையிலேயே உள்ளது. அதுமட்டுமின்றி செல்டாஸின் ப்ரீமியம் தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளதற்கு சாட்சியாக, இந்தக் காரை முன்பதிவு செய்துள்ளவர்களில் 80 சதவிகிதத்தினர் டாப் மாடல்களையே தேர்ந்தெடுத்துள்ளனர்.