அதிக டெஸ்ட் விக்கெட் – அஸ்வினுடன் கடும் போட்டி.. 7ஆம் இடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய ஸ்பின்னர்
ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஏழாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அஸ்வின் தற்போது ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இருவருக்குமான விக்கெட் போட்டி சூடு பிடித்து இருக்கிறது.
நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் நாதன் லியோன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். இத்துடன் டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 521 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
அதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் எட்டாம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் கர்ட்னி வால்ஷ் வீழ்த்திய 519 விக்கெட்கள் சாதனையை முறியடித்த நாதன் லியோன் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறார்.
அஸ்வினை பொறுத்தவரை அவர் 507 விக்கெட்கள் வீழ்த்தி ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். அஸ்வின் 99 டெஸ்ட் போட்டிகளில் 187 இன்னிங்ஸில் 507 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். நாதன் லியோன் 128 டெஸ்ட் போட்டிகளில் 239 இன்னிங்ஸ்களில் 521 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இன்னிங்க்ஸ் கணக்கில் பார்த்தால் அஸ்வின், லியோனை விட சிறப்பாகவே பந்து வீசி இருக்கிறார். ஆனால், குறைவான போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார்.
நாதன் லியோன், அஸ்வின் என இருவருமே சமீபத்தில் தான் 500 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கும் நிலையில் அடுத்து 600 விக்கெட்களை யார் முதலில் கைப்பற்றப் போவது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இந்திய அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் அஸ்வின் விரைவில் 600 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்ட வாய்ப்பு உள்ளது.