ஒரே டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்.. தனி ஆளாக போட்டியின் முடிவையே மாற்றிய பவுலர்கள்
டி20, ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் வெற்றி பெற முடியும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் 20 விக்கெட் எடுத்தால் மட்டுமே வெல்ல முடியும். அந்த வகையில் ஒரே டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தற்போது காணலாம். ஒரே டெஸ்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தவர், இங்கிலாந்து அணியின் ஆப் ஸ்பின் பவுலர் ஜிம் லேக்கர்.
இவர் 1956 ல் ஆஸ்திரே லிய அணிக்கு எதிராக மான்செஸ்டரில் 90 ரன்கள் கொடுத்து 19 விக்கெட்டுகள் கை பற்றினார். இது ஒரு உலக ரிக்கார்டு.
இவர் வீசிய 68 ஓவர்களில் 27 மெய்டன் ஓவர்கள். ஒரு விக்கெட்டை டோனி லாக் ( Tony Lock ) எடுக்காமல் இருந்திருந்தால் அதையும் ஒரு வேளை ஜிம் லேக்கரே கைபற்றி இருப்பாரோ என்னவோ..
இவருக்கு அடுத்து ஒரே டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதித்தவர், இங்கிலாந்து வீரர் எஸ் எப் பார்ன்ஸ். ( SF Barnes ) இவர் 1913 டிசம்பர் மாதத்தில் ஜோஹன்னேஸ்பர்கில் , 17 தென் ஆப்பிரிக்க வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிகழ்வின் பொழுது மொத்தமாக 65.3 ஓவர்கள் வீசி இந்த 17 விக்கெட்டுகளை வீழ்த்த 159 ரன்கள் கொடுத்தார்.
இந்த இரண்டு டெஸ்ட் மேட்சுகளிலும் இங்கிலாந்து அணிகள் மகத்தான வெற்றிகளை பதிவு செய்தன. மூன்று வேறு பட்ட டெஸ்ட் மேட்சுகளில் 16 விக்கெட்டுகளை எடுத்த நிகழ்வுகளும் உள்ளன. 1972 ஜூன் மாதத்தில், லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர் பாப் மெஸ்ஸி ( RAL Massie ) தனது முதல் டெஸ்ட் விளையாட களம் இறங்கினார், இங்கிலாந்து அணிக்கு எதிராக.
டெஸ்ட் முடிவில் பவுலிங்கில் சாதனை புரிந்தார். இவர் மொத்தம் வீசியது 60.1 ஓவர்கள். இதில் 16 மெய்டன் ஓவர்கள். கொடுத்த ரன்கள் 137.
வீழ்த்திய மொத்த விக்கெட்டுகள் 16.அறிமுக டெஸ்ட்டிலேயே இந்த வகை சாதனை புரிந்த முதல் கிரிக்கெட் வீரர் இவர் ஆவார்.