மருமகனை நம்பிய மாமியார்.. இந்த முறையாவது ஜெயம் ரவி லாபத்தைக் கொடுத்தாரா?.. சைரன் ஹிட்டா? ஃபிளாப்பா?

கடந்த ஆண்டு ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக நடித்து வெளியான அகிலன் மற்றும் இறைவன் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தன. கடந்த வாரம் வெளியான சைரன் 108 படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாசிட்டிவான விமர்சனங்கள் படத்துக்கு கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் சைரன் திரைப்படம் கல்லா கட்டியதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்தை நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜய்குமார் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில்: அறிமுக இயக்குநர்களை ஜெயம் ரவியை போல சமீப காலமாக வேறு எந்த நடிகர்களும் நம்புவது கிடையாது. தொடர்ந்து பல அறிமுக இயக்குநர்களை நம்பி நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில், சில படங்கள் அவருக்கு கைகொடுக்கின்றன. சில படங்கள் சொதப்பி விடுகின்றன. ஆனால், தொடர்ந்து அறிமுக இயக்குநர்களை வளர்த்து வருகிறார். அந்தோனிபாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து கடந்த வெள்ளிக்கிழமை சைரன் படம் 1000க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியானது.

சைரன் கதை: தனது மனைவி ஜெனிஃபரை (அனுபமா பரமேஸ்வரன்) திலக வர்மன் (ஜெயம் ரவி) கொலை செய்து விட்டதாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வாழ்க்கையில் புயலை கிளப்பி அவரை ஆயுள் தண்டனை கைதியாகவும் மாற்றி விடுகின்றனர். தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை பார்த்துக் கொள்ளாமல் தங்கள் குடும்பத்தை இந்த கதிக்கு ஆளாக்கியவர்களை பரோலில் வரும் ஜெயம் ரவி எப்படி பழி வாங்குகிறார். போலீஸ் அதிகாரியான கீர்த்தி சுரேஷ் அதை கண்டுபிடிக்கிறாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

சைரன் பட்ஜெட் இத்தனை கோடியா?: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சைரன் படத்தின் பட்ஜெட் 30 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜய்குமார் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த தயாரிப்பு நிறுவனம் தான் சைரன் 108 படத்தை தயாரித்துள்ளது.

சைரன் வசூல் இதுவரை: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜெயம் ரவியின் சைரன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. தியேட்டரில் பார்க்கும் அளவுக்கான தரமான படம் என்றே பலரும் விமர்சித்து வரும் நிலையில், வசூல் ரீதியாக பெரிய அதிர்வலையை இந்த படம் ஏற்படுத்தவில்லை. இந்த ஆண்டு வெளியான கோலிவுட் படங்கள் எல்லாம் அவதிப்பட்டு வரும் அதே கஷ்டத்தை சைரன் படமும் அடைந்திருக்கிறது. இதுவரை 8 கோடி ரூபாய் வசூலை உலகளவில் இந்த படம் ஈட்டியிருக்கிறது. இந்தியளவில் 6.8 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் சைரன் திரைப்படம் வெளியாகிறது.

மாமியாருக்கு லாபமா?: ஜெயம் ரவியை வைத்து இதற்கு முன்னதாக அடங்கமறு படத்தை தயாரித்த போது நல்ல வெற்றியும் வசூலும் கிடைத்தது. அதன் பின்னர் பூமி படத்தை அவரது மாமியார் தயாரித்தார். ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சைரன் திரைப்படம் ஒரு வாரத்தில் 8 கோடி வசூல் செய்திருக்கும் சூழலில் அதிகபட்சமாக 10 முதல் 15 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓடிடி விற்பனை, சேட்டிலைட் உரிமம் எல்லாம் சேர்த்து பார்த்தால் கூட லாபம் வருமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *