மேக்கப் பொருளை பயன்படுத்திய மாமியார்.. விவாகரத்து கோரும் மருமகள்.. அதிர்ச்சி வழக்கு!
ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியிருக்கிறார். இதற்கான காரணத்தை கேட்டால் உங்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இவரது மாமியார், இவரது மேக்கப் பொருளை கேட்காமல் எடுத்து அடிக்கடி பயன்படுத்துகிறாராம். இதனாலேயே வீட்டில் மாமியாருக்கும், மருமகளுக்கும் ஓயாமல் சண்டை நடப்பதால், இதை பொறுக்க முடியாமல் அந்தப் பெண்ணின் கணவர் தனது மனைவியையும் அவளது சகோதரியையும் வீட்டைவிட்டே துரத்திவிட்டார். ஆக்ராவில் உள்ள மால்புரா கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளுக்கும், எட்டு மாதங்களுக்கு முன்பு ஒரே வீட்டில் வசித்து வரும் இரு சகோதரர்களுக்கு மணமுடித்து வைக்கப்பட்டனர். எல்லாம் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த சமயத்தில், தான் வைத்திருக்கும் அழகு சாதனப் பொருட்கள் சீக்கிரமாக முடிந்து போவதை கண்டுபிடித்துள்ளார். அதன்பின்னர் தான் தனது மாமியார் தனக்கு தெரியாமல் தன்னுடைய மேக்கப் பொருளை அடிக்கடி பயன்படுத்துவதை தெரிந்து கொண்டுள்ளார்.
இப்படி அடிக்கடி பயன்படுத்துவதால் மேக்கப் பொருள் சீக்கிரம் தீர்ந்து போவதாகவும், இதன் காரணமாக தன்னால் விசேஷங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மேக்கப் போட முடியவில்லை என்றும் மாமியாருக்கும், மருமகளுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதற்கு தீர்வு கிடைப்பதற்காக ஆக்ரா காவல்துறையினரின் குடும்ப ஆலோசனை மையத்தை அணுகினார் அந்தப் பெண். இனிமேல் வீட்டில் இருக்கும் போது தன்னுடைய மேக்கப் பொருளை என்னுடைய மாமியார் பயன்படுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார். இதை தன் மகனிடம் குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளார் மாமியார். இதில் கோபமடைந்த அவரது மகன், தனது மனைவியை கடுமையாக திட்டி கொடுமைப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் நிலைமை மோசமடைந்து தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையையும் வீட்டை விட்டே துரத்தியுள்ளார்.
அன்றிலிருந்து கடந்த இரண்டு மாதங்களாக இரு சகோதரிகளும் தங்களுடைய தாய் வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக மாமியாரும், மருமகளும் ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்ப ஆலோசனை மையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அமித் கவுர் என்பவர்தான் இவர்களுக்கு ஆலோசனை வழங்க வந்திருந்தார். இவர்கள் இருவருக்கும் எவ்வளவோ ஆலோசனை கொடுத்த பின்பும், தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்றும் அவர் என்னை ரொம்பவும் கொடுமை படுத்துகிறார் என்றும் தன்னை விட அவரது தாயிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும் அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டார் அந்தப் பெண்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் அடுத்ததாக அந்தப் பெண்ணிற்கும், கணவருக்கும் இடையே கவுன்சிலிங் கொடுக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு இடையே உள்ள உண்மையான பிரச்சனை வெளிவரும். அதன்பின்னர் அதற்கான தீர்வை கண்டறிந்து முறிந்து போன உறவை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் எனக் கூறுகிறார் அமித் கவுர்.