தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வரும் தாய் வீட்டு சீர்! மருமகன்கள் வந்த பிறகும் மாறாத வழக்கம்!
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு இன்னும் தனது தாய் வீட்டிலிருந்து பொங்கல் சீர் கொடுக்கப்படுகிறது.
தமிழச்சி தங்கபாண்டியன் மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து மருமகன்கள் வந்த பிறகும் கூட, இன்னும் இந்த பண்பாடு வழக்கத்தை மாறாமல் கடைபிடிக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியனின் சகோதரரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு. தந்தை ஸ்தானத்தில் நின்று தனது அக்காவுக்கு பொங்கல் சீர் கொடுத்து வருகிறார். அதேபோல் தமிழச்சி தங்கபாண்டியனும் தனது மகள்கள் வீட்டுக்கு சீர் கொடுத்து அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதற்காக தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வசதி வாய்ப்பு இல்லை என்று அர்த்தமில்லை. ஆயிரம் இருந்தாலும் அம்மா வீட்டிலிருந்து வரும் சீருக்கு இணையாகாது. இதனால் தான் இந்த பண்பாடு இன்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழச்சி தங்கபாண்டியனை பொறுத்தவரை பொங்கல் பண்டிகையை மட்டும் ஆண்டுதோறும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில் தான் கொண்டாடுவார். தீபாவளியை பெரியளவில் கொண்டாடத இவர் பொங்கல் பண்டிகையை மிகப் பெரிய அளவில் சொந்த பந்தங்களுடன் சொந்த ஊரில் கொண்டாடித் தீர்ப்பார்.
தனது சகோதரர் தங்கம் தென்னரசுவை ”கண்ணு” என்று தான் தமிழச்சி தங்கபாண்டியன் அழைப்பார். அந்தளவுக்கு தனது சகோதரர் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். அதேபோல் தான் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் தனது அக்கா மீது பாசம் வைத்திருக்கிறார்.
தமிழச்சி தங்கபாண்டியன் சொந்த ஊருக்கு போய்விட்டால் போதும், வாத்தியார் மகள் வந்திருக்கு என்று தான் அவரை பார்க்க ஊர்க்காரர்கள் வருவார்கள். அதேபோல் தமிழச்சியின் இயற்பெயர் சுமதி என்றாலும் அதனை செமதி என்று தான் சொந்த ஊர்க்காரப் பெண்மணிகள் உச்சரிப்பார்கள். இப்படி பழைய பழக்க வழக்கத்துடன் மண்மனம் மாறாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை என்றே சொல்லலாம்.