திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, அயோத்தியில் லதா மங்கேஷ்கர்! ராம ஜென்ம பூமியில் மீராவின் கானம்!
மொழிகளைத் தாண்டி இந்திய இசை ரசிகர்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படும் இவர் 1942-ம் ஆண்டு பாடத் தொடங்கி 2019-ம் ஆண்டு வரை சுமார் 77 ஆண்டுகள் பாடிக் கொண்டே இருந்த சாதனையாளர்.
தாதா சாஹேப் பால்கே, செவாலியே, பாரத ரத்னா உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்ற இன்னிசை அரசி இவர்.1929-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி பிறந்தார் லதா மங்கேஷ்கர். ஹேமா என்ற இயற்பெயர் கொண்ட லதா மங்கேஷ்கரின் குடும்பம், பாரம்பர்ய நம்பிக்கைகளைக் கொண்டது. லதாவின் தந்தை வழி தாத்தா கோவாவில் புகழ்பெற்ற மங்கேசி ஆலயத்தின் அர்ச்சகர். இதனால் இவர்களது குடும்பப் பெயரில் மங்கேஷ்கர் என்பது தொடர்ந்து வந்தது. பக்தியிலும் சேவையிலும் தன்னை ஆழ்த்திக் கொண்ட லதா மங்கேஷ்கர் திருமணமே செய்து கொள்ளவில்லை. இவர் வாரணாசியில் வேதம் பாடம் பயின்ற பல ஏழை மாணவர்களுக்கு உதவிகள் புரிந்துள்ளார். காசி விஸ்வநாதர் மீது பக்தி கொண்டவர். காசியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்.