குப்பையில் பணம் சம்பாதிக்கும் முகேஷ் அம்பானி.. மெகா பயோகேஸ் திட்டம்..!!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெட்ரோல், டீசல் விற்பனையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நீண்ட கால கனவு பொதுத்துறை நிறுவனங்களின் ஆதிக்கத்தால் சாத்தியமில்லாமல் உள்ளது.
ஆனால் ரீடைல் எரிசக்தி துறையில் தனது முத்திரையைப் பதிக்காமல் விடமாட்டேன் என உறுதியாக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது பயோ கேஸ் தயாரிப்பில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் 50 க்கும் மேற்பட்ட கம்பிரஸ்ட் பயோகேஸ் (CBG) நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், அதன் தலைவர் முகேஷ் அம்பானி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 CBG நிலையங்களை அமைக்கும் திட்டங்களை அறிவித்தார்.
CBG என்பது கழிவுகள் அல்லது உயிரி மூலங்கள் அதாவது பயோமாஸ்-ல் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை எரிபொருள் ஆகும். இது CNG போன்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் இது வாகன, தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாடுகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம்.
“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்படவுள்ள 50 க்கும் மேற்பட்ட கம்பிரஸ்ட் பயோகேஸ் நிலையங்களுக்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள ஆலைகளுக்கான டெண்டரை விரைவில் அறிவிக்கும்,” என்று எண்ணெய் மற்றும் எரிவாயு துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த டெண்டர்களை கம்பிரஸ்ட் பயோகேஸ் நிலையங்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆலையும், ஒரு நாளைக்கு 250-500 டன் மூலப்பொருள் பதப்படுத்தும் திறன் கொண்டிருக்கும், மேலும் CBG உற்பத்தி ஒரு நாளைக்கு 10 டன்னிலிருந்து 20 டன் வரை இருக்கும். ஒரு நாளைக்கு 10 டன் உற்பத்தி செய்யும் ஆலைக்குக் குறைந்தபட்சம் ரூ.100 கோடி முதலீடு தேவை.
ஆலைகளுக்கான மூலப்பொருட்கள் அதாவது கழிவுகள் குறிப்பாகக் கரும்பு சக்கைகளை பெரிய அளவில் கொள்முதல் செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல சர்க்கரை ஆலைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜாம்நகரில் உள்ள அதன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்கனவே இரண்டு CBG டெமோ யூனிட்களை அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து முதல் கமர்சியல் CBG ஆலையை உத்தரப்பிரதேச மாநிலத்தின் Barabanki-யில் துவங்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் 106 பயோகேஸ் ஆலைகள் மூலம் வருடம் 5.5 மில்லியன் டன்கள் விவசாய மற்றும் கரிம கழிவுகளை ஆதாரமாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க உள்ளது. குப்பையில் இருந்து பணம் சம்பாதிக்கிறார் முகேஷ் அம்பானி.
இந்த கழிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கிட்டத்தட்ட 2 மில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், மற்றும் ஆண்டுதோறும் 2.5 மில்லியன் டன் கரிம உரத்தை உற்பத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக இறக்குமதி செய்யப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் ஆண்டுக்கு சுமார் 0.7 மில்லியன் டன்கள் குறையும் இது இந்தியப் பொருளாதாரத்திற்கும் லாபம்.