குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. ரூ.20 லட்சம் கோடியை தொட்ட முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்..!
இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் புதிய 52 வார உயர்வான 2957.80 ரூபாய் அளவீட்டை எட்டியது. இன்று காலை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 1.89% வரை உயர்ந்தது மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் என்ற சந்தை மதிப்பீட்டை எட்டியது.
இந்தியாவில் முதல் முறையாக 20 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை எட்டிய முதல் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜனவரி 29-ம் தேதி ரூ.19 லட்சம் கோடியைத் தொட்டதில் இருந்து வெறும் இரண்டு வாரங்களில், சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை சுமார் 14% அதிகரித்துள்ளது, இந்த மாபெரும் வளர்ச்சி பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது. சமீபத்தில் சவுதி ஆராம்கோ இந்தியாவில் முதலீடு செய்யும் பேச்சுவார்த்தையை துவங்கியது குறித்த செய்தி ரிலையன்ஸ் பங்கு வளர்ச்சிக்கு சாதகமாக மாறியுள்ளது.
மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பல துறையில் வர்த்தகம் செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வரலாற்று சாதனை படைத்தது மட்டும் அல்லாமல், அதன் முதலீட்டாளர்களுக்கு இதுவரையில் யாரும் கொடுக்காத லாபத்தையும், செல்வத்தையும் பங்கு முதலீட்டு வாயிலாகக் கொடுத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஆகஸ்ட் 2005ல் 1 லட்சம் கோடி ரூபாய் என்ற சந்தை மதிப்பைத் தொட்டன, அதைத் தொடர்ந்து நவம்பர் 2019ல் 10 லட்சம் கோடி ரூபாய் அளவை எட்டியது. பிப்ரவரி 13, 2024ல் 20 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக இருக்கும் வேளையில், இதற்குப் பின்பு டிசிஎஸ் (ரூ. 15 லட்சம் கோடி), ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ. 10.5 லட்சம் கோடி), ஐசிஐசிஐ வங்கி (ரூ. 7 லட்சம் கோடி) மற்றும் இன்ஃபோசிஸ் (ரூ. 7 லட்சம் கோடி) ஆகியவை உள்ளது.
டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 9.3 சதவீதம் உயர்ந்து 17,265 கோடி ரூபாயாகவும், வருவாய் அளவு 3.6 சதவீதம் அதிகரித்து 2.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் EBITDA அளவு 40,656 கோடி ரூபாயாக உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவில் மொத்த நிகர லாபத்தில் சுமார் 32 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்து சுமார் 3,165 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2400 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர அடிப்படையில் நிகர லாபம் 12.3% வளர்ச்சி அடைந்து 5,208 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் அதன் வர்த்தகச் செயல்பாடுகளின் மூலம் வருவாய் அளவு வருடாந்திர அடிப்படையில் 10.3% அதிகரித்து ரூ.25,368 கோடியாக உள்ளது.