வாரம் தவறாம இந்த ஹோட்டலுக்கு போவாராம் முகேஷ் அம்பானி..!
சிலருக்கு மனசுக்குப் பிடித்துவிட்டால் போதும், எப்பாடுபட்டாலும் அதே ஹோட்டலுக்கு சென்று அதே உணவை பொழுது தவறாமல் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். இந்தியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானியும் அதேபாணி தான்.
எவ்வளவுதான் வேலை பிசி என்றாலும் தூக்கிப் போட்டுவிட்டு அந்த ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு தான் மறுவேலை.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தனது இளையமகன் ஆனந்த் அம்பானியின் திருமண முன்வைபோக நிகழ்ச்சியின்போது நடைபெற்ற அன்னதானத்தின்போது முகேஷ் அம்பானியிடம் தெரிந்த உற்சாகமும் அர்ப்பணிப்புடன் பரிமாறிய விதமும் உணவின் மீது அவருக்குள்ள பற்றை வெளிக்காட்டின.
தனது கல்லூரிக் காலத்தில் 1975 முதல் 1979 வரை மும்பையில் உள்ள கபே மைசூர் உணவகத்தில் முகேஷ் அம்பானி தவறாமல் சென்று சாப்பிடுவார். இப்போதும் அந்தக் கடையில் இருந்து இட்லியை ஆர்டர் செய்து சாப்பிடுவதோடு, வாரம் தவறாமல் நேரே சென்று தென்னிந்திய உணவுகளை வெளுத்துக் கட்டுகிறார்.
அவருக்கு இட்லி, தோசை என்றால் கொள்ளைப் பிரியம். அதுவும் கபே மைசூர் தோசை என்றால் ஆஹாஹாஹா. மனிதர் சொக்கித்தான் போவார்.
மும்பையின் பழமை வாய்ந்த தென்னிந்திய உணவகங்களில் கபே மைசூரும் ஒன்று. 1936 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் இணை நிறுவனர் நாகேஷ் ராம நாயக்கின் கைவண்ணம் இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு அச்சாரம்.
கபே மைசூர் உணவகம் மும்பையின் கிழக்கு மாதுங்காவில் உள்ள பி.என் மகேஸ்வரி உத்யன் எதிரில் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சாலையில் துர்லப் நிவாஸ் அருகே உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் ஒவ்வொரு புதன்கிழமையும் மூடப்படும்.
இட்லி, வடை, கலவை சாதங்கள், உப்புமா, பூரி, ஸ்நாக்ஸ் போன்ற தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவுகள், சாண்ட்விச்கள், ஸ்ட்ரீட் புட்கள், இனிப்புகள், லஸ்ஸி, ஃபளூடா, மில்க் ஷேக்குகள் போன்ற பானங்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த உணவகத்தின் சொல்லியே ஆகவேண்டிய ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் இங்கு நான்கு அல்லது ஐந்து அல்ல மொத்தம் 81 வகையான ரகரகமான சுவையான தோசை வகைகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் தனிச்சுவையுடன் தயாரிக்கப்படுகிறது.
கபே மைசூர் உணவக இன்ஸ்டாகிராம் பக்கத்தின்படி, 1936 ஆம் ஆண்டு முதல் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்தில் சாப்பிட்டு பாராட்டியுள்ளனர். தினசரி குவியும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக கபே மைசூர் உணவகத்தின் டிஜிட்டல் ஆப்ஷனில் ஆர்டர் செய்தால் உங்கள் வாகனத்துக்கு டெலிவரி செய்யப்படும்.
கபே மைசூர் டிஜிட்டல் உணவகத்தில் ஹல்வா, தென்னிந்திய இனிப்புகள், பால் இனிப்புகள், காஜு இனிப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன.