Mumbai Indians: தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோல்வி அடைந்து மும்பை இந்தியன்ஸ் மோசமான சாதனை!
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை 168 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.
பின்னர், 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் நமன் திர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 43 ரன்களில் நடையை கட்டினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.
மேலும், மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 47 பந்துகளில் 62 ரன்கள் தேவைப்பட்டது. வரிசையாக மும்பை அணியில் டிவேல்டு பிரேவிஸ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா என்று பேட்டிங் ஆர்டர் இருந்தது. எனினும் சீரான இடைவெளியில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட்டுகளை இழந்து கடைசியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
முதல் 2 பந்தில் ஹர்திக் பாண்டியா 6, 4 என்று 10 ரன்கள் எடுத்தார். 3ஆவது பந்தில் அவர் ஆட்டமிழக்க, 4ஆவது பந்தில் பியூஷ் சாவ்லா ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு வரையில் ரோகித் சர்மா தலைமையில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையில் தோல்வியை தழுவியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.