இயங்க வைக்கும் தசைகள். இயக்குவது எப்படி?
நன்றி குங்குமம் தோழி
ஒவ்வோர் ஆண்டும் புதிதாய் பிறக்கும்போது பல முடிவுகளை நாம் முன்னெடுப்போம். அதில் எப்போதும் தவறாமல் இருப்பது நம் உடல் நலன் சார்ந்த விஷயங்கள்.
குறிப்பாக, உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என நினைப்பது. எனவே, இன்று பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் உடற்பயிற்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் தசைகளை (Muscles) நன்கு புரிந்துகொண்டு இன்னும் சிறப்புடன் உடற்பயிற்சிகளை செய்வதற்காகவே இந்த விழிப்புணர்வு கட்டுரை.
தசைகள் என்பவை…
நாம் மூட்டுகளை அசைத்து வேலைகளை செய்வதற்கு தசைகளே உதவுகிறது. எலும்புகளுக்கும், மூட்டுகளுக்கும் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் அமைந்திருக்கும் இந்த தசைகள் வெவ்வேறு வடிவங்களில் (நீண்ட, பட்டையாக, தடித்த, மெலிந்த, சதுரங்கமாக) இருக்கும். எலும்பின் ஓர் இடத்தில் ஆரம்பப் புள்ளியாக தசை ஒட்டியிருக்கும். அதேபோல முடிவுப் புள்ளியாக அதே எலும்பில் அல்லது அடுத்த எலும்பில் ஒட்டி இருக்கும்.
இந்த இடத்தினை தசை நார் (tendon) என மருத்துவத்தில் சொல்வோம். கைகால், முதுகு தண்டுவடம், இடுப்பு, முகம் போன்ற இடங்களில் இருக்கும் தசைகளை நாம் கட்டுப்படுத்த முடியும். (உதாரணமாக, நிற்க, உட்கார வேண்டும் என நினைத்து அதனை நாம் செய்வது). ஆனால் வயிறு, குடல், இதயம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தசைகளை மூளையால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
தசைகளின் வேலை…
மூளையில் இருந்து தசைகளுக்கு சமிக்கை வரும்போது அது சுருங்கி விரியும். இதனால் மூட்டுகளை நம்மால் அசைக்க முடிகிறது. இவ்வகையில் நடக்கவும், சுவாசிக்கவும், கைகளால் வேலைகளை செய்யவும், உட்காரவும், மென்று சாப்பிடவும், சிரிக்கவும், மற்ற முக பாவனைகள் செய்யவும், குனிந்து நிமிரவும் என தினசரி நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும்
தசைகளே உதவுகிறது.
தசைகளின் முக்கியத்துவம்…
* தசைகள் இல்லையெனில் நம்மால் அசைவுகளை உருவாக்க முடியாது.
* பூமியின் புவியீர்ப்பு விசைக்கு எதிரான விசையை உருவாக்கி சுருங்கி விரிந்து நாம் அசைவுகள் செய்ய உதவுகிறது.
* நாம் அதிக எடையுள்ள பொருட்களை கையாளும்போது எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் அந்த எடையை முதலில் தாங்கி பாதுகாப்பது தசைகளே.
என்னென்ன பாதிப்புகள்…?
தசைகளுக்கு பல வகையான பாதிப்புகள் எளிதில் வர நேரிடலாம். அவை,
* தசை இறுக்கம் (Tightness)
* தசை பலவீனம் (Weakness)
* தசை சுளுக்கு (Sprain)
* தசை பிடிப்பு (Cramp)
* தசை காயம் (Injury)
* தசை கிழிதல் (Tear)
* தசைநார் கிழிதல் (Tendon Tear)
* தசை அயற்சி (DOMS)
* தசைநார் அழற்சி (Tendon Inflammation)