“என் மகள் ஐஸ்வர்யா எனக்கு இன்னொரு தாய்” ரஜினி பேச்சை கேட்டு கண்கலங்கிய ஐஸ்வர்யா

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்த நிலையில் விழா நடக்குமா என்ற கேள்வி இருந்தது. ஏற்கனவே திட்டமிட்டு, பலநூறு பேர்களின் உழைப்பில் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் வந்த நிலையில், நிகழ்ச்சியை ரத்து செய்வது சரியல்ல என்று திட்டமிட்டபடி நேற்று விழாவை நடத்தினர்.
விழாவில் பேசியவர்கள் முதலில் பவதாரிணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். வழக்கம் போல் ரஜினியின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. மகளின் இயக்கத்தில் முதன்முறையாக நடித்த ரஜினிகாந்த், அவரை பற்றி பேசினார்.
எனது இன்னொரு தாய் தான் ஐஸ்வர்யா, நாம் 10 சதவீதம் அன்பு கொடுத்தால், 100 சதவீதம் திரும்பி கொடுப்பார். நான் முடியாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த போது, அவர் ஒற்றை ஆளாக தன்னை பார்த்து கொண்டார். இதனால் சவுந்தர்யாவும் என்னிடம் கோபித்து கொள்ளமாட்டார். அவருக்கு ஒரு கை குழந்தை இருந்ததால் அவரால் வரமுடியவில்லை. கடவுளே 2 பெண் குழந்தைகள் வடிவில் எனக்கு பிறந்துள்ளதாக மகிழ்ச்சியை பகிர்ந்தார். இதனை கேட்ட 2 மகள்களும் நெகிழ்ச்சியில் கண்கலங்கினர்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது, தான் சொன்ன காக்கா – கழுகு கதையை, விஜய்யை தாக்கிப் பேசியதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளதாகவும், அது தம்மை வேதனையடைய செய்தது. எப்போதுமே தான் விஜய்யின் நலம் விரும்பி என்று கூறிய ரஜினி, விஜய்யை போட்டியாக கருதினால் தனக்கு மரியாதை தராது என்றும், அதேபோன்று, விஜய் தம்மை போட்டியாக நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டார்.
விஜய் அரசியலுக்கு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை குறிப்பிட்ட ரஜினி, அதற்காக அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்தார். விஜய் மற்றும் தன்னுடைய ரசிகர்கள் காக்கா – கழுகு கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டுள்ளதால், ரஜினியின் பேச்சால் உருவான சர்ச்சைக்கு அவரே முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டதாகவே கூறப்படுகிறது.