என் அப்பா சங்கி கிடையாது.. மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆவேசம்!
ரஜினிகாந்தின் மூத்த மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம் தான் லால் சலாம் படம். விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் என்பதால் கபில்தேவையும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு லால் சலாம் வெளியாகும் என்று முதலில் அறிவித்திருந்தவர்கள், பிறகு வெளியீட்டு தேதியை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு மாற்றினர்.
இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. விழாவில் பேசிய ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் “இந்தக் கதையை கேமராமேன் விஷ்ணுதான் சொன்னார். கதைக்காக பலரை மீட் பண்ணினேன். அதுக்குப் பிறகு ஷோ – ரீல் தயார் பண்ணேன். முதல்ல இரண்டு தயாரிப்பு நிறுவனத்துக்குப் போனேன். மூன்றாவதா போன தயாரிப்பு நிறுவனத்தில், இது சின்ன பட்ஜெட்டா இருக்கு, 40 கோடிக்கு பட்ஜெட் வர்ற மாதிரி போட்டு எடுத்திட்டு வாங்கன்னு சொன்னாங்க. அப்புறமா அப்பா இந்த ஷோ – ரீலை பார்த்தார். அதுக்குப் பிறகுதான் அவர் இந்த கதைக்குள்ள வந்தார். இந்த கதாபாத்திரத்தை நான் செய்தா எப்படி இருக்கும்னு கேட்டார். அப்புறம்தான் இதெல்லாம் நடந்தது.
“பொண்ணுக்கு ஒரு கஷ்டம்னா அப்பா பணம் கொடுக்கலாம். என் அப்பா படம் கொடுத்திருக்கார், வாழ்க்கைக் கொடுத்திருக்கார். அவர்தான் முதன்மை. இந்தப் படம் பேசுற தத்துவங்களுக்காகத்தான் அப்பா இதுல வந்தாங்க. எங்க டீம் சோஷியல் மீடியா பதிவுகளை காமிப்பாங்க. அதுல ஒரு வார்த்தை என் காதுல அடிக்கடி விழுகிறது. எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. ஒரு அரசியலை சார்ந்தவங்களை சங்கின்னு சொல்வாங்கன்னு சொல்றாங்க. அவர் சங்கி இல்ல, ரஜினிகாந்த் சங்கி கிடையாது. இந்தப் படத்தைப் பார்த்தா உங்களுக்கே அது புரியும். ஒரு சங்கி இந்தப் படத்தைப் பண்ண முடியாது. ஒரு மனிதநேயவாதிதான் இந்தப் படத்தை பண்ண முடியும். அந்த தைரியம் அவருக்கு மட்டும் தான் இருக்கு. நான் கர்வமாகச் சொல்றேன். நீங்க இந்து, கிறிஸ்டியனா இருக்கலாம். ஆனால், ரஜினிகாந்த் ரசிகராகத்தான் இந்த படத்தை பார்ப்பீங்க” என்றார்.
இந்த விழாவில் விக்ராந்த், விஷ்ணு விஷால், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட படக்குழுவினர், ஐஸ்வர்யாவின் இரு மகன்கள் மற்றும் ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் சங்கி இல்லை என்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.