‘என் உசுரு இந்த கடல்ல போகணும்’- ராமேஸ்வரம் கடல் பாசி விவசாயி சுகந்தி
ராமேஸ்வரத்தில் கடல் பாசி விவசாயம் செய்து வருகிறார் சுகந்தி. ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்த சுகந்திக்கு 60 வயதைக் கடந்த இவரது தாய்தான் கடல் பாசி வளர்ப்பின் முதல் வழிகாட்டி.
ராமநாதபுரத்தில் மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படும் இந்த கடல்பாசி வளர்ப்பில் பெரும்பாலும் மீனவப் பெண்கள் தான் ஈடுபட்டுள்ளனர்.
400க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த தொழிலை செய்து வருகிறார்கள். கடும் உழைப்பு மற்றும் குறைவான லாபத்தினால் இந்த தொழிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் கணிசமாக குறைந்துள்ளது.
சுகந்தி, கடல்பாசி வளர்ப்பு மட்டும் இல்லாமல் தனது கிராமப் பெண்களை இணைத்து சுய உதவிக் குழுக்களையும் நடத்தி வருகிறார். மேலும் கடல் சிப்பிகள், கடல்பாசி வளர்ப்பிற்கான ராமநாதபுரம் மாவட்டத்தின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
‘எனக்கு அம்மா, தெய்வம் எல்லாமே கடல் தான். நான் 8 வயசுல இருந்தே கடல்ல வந்து பாசி எடுக்கிறது, மீன் பிடிக்கிறது எல்லாம் கத்துக்கிட்டேன். இப்போ 15 வருசமா பெப்சி பாசியும் நாங்க மூங்கில்ல கட்டி வளக்குறோம்.
நிறைய பாசி இருக்கு. பெப்சி பாசி நாங்க வருஷம் முழுக்க பண்ணுவோம். மரிக்கொழுந்து வருசத்துக்கு மூணு மாசம்தான் இருக்கும்.
மரிக்கொழுந்து பாசி இயற்கையா கடல்ல பாறையில விளையிறது தான். அந்த பாசி எடுத்து நம்ம வெளியூருக்கு அனுப்புவோம். அந்த பாசியில மெடிசின், ஆபிரேஷன் பண்ற நூல், செடிகளுக்கு உரம், ஐஸ்கிரீம், சாக்லேட், ஜிகர்தண்டா இப்படி நிறைய தயார் பண்றாங்க. மீன்ல எந்த அளவுக்கு சத்து இருக்கோ, அதே அளவு சத்து இந்த பாசியிலயும் இருக்கு.
கடல்ல எடுக்கிற சங்குகளை சாக்குக்குள்ளேயே போட்டுருவோம். கரையில வந்து பாசி தனியா, சங்கு தனியா பிரிச்சி எடுத்துக்குவோம். அதை கம்பெனியில கொடுத்துருவொம்.
அவங்க அதை பாலிஷ் பண்ணி விற்பனை பண்ணுவாங்க. வெளியூருக்கு ஏற்றுமதி பண்ணுவாங்க. அவங்ககிட்ட அந்த பாசிய நாங்க திரும்ப வாங்கி, எங்க மகளிர் குழுல இருந்து அலங்கார பொருட்கள் செய்ஞ்சு விற்பனை பண்றோம்’, இப்படி பல விஷயங்களை அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார் சுகந்தி.
கடலின் மீதுள்ள அதீத காதலாலும், தனது செயல்பாட்டாலும் தனது கிராமம் மற்றும் மீனவ பெண்களுக்கு ஒரு நம்பிக்கையாகவும் இருக்கிறார் சுகந்தி.