இங்கிலாந்து மருத்துவமனைக்குள் பட்டாக்கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்: பொலிசார் குவிப்பு
பிரித்தானியாவில், 2022 ஜூலைக்கும், 2023 ஜூலைக்கும் இடையில் மட்டும், சுமார் 250 பேர் பட்டாக்கத்திகளுக்கு பலியாகியுள்ளார்கள்.
இப்போது கூட, பிரித்தானிய செய்தித்தாள்களில் 15 வயது பிள்ளைகள் இருவர் சேர்ந்து திருநங்கை ஒருவரைக் கொலை செய்தது குறித்த செய்திகள்தான் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.
பயத்தை உருவாகியுள்ள விடயம்
ஆக, யாராவது கத்தியுடன் நடமாடுவதாக கேள்விப்பட்டாலே மக்கள் பயப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது என்றே கூறலாம்.
இப்படிப்பட்ட ஒரு சுழலில், இங்கிலாந்திலுள்ள Bath என்னுமிடத்தில் உள்ள Royal United Hospital என்னும் மருத்துவமனைக்கு நேற்று தொலைபேசி வாயிலாக காலை 9.45 மணிக்கும், பின்னர் 10.15 மணிக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வேறு விடயத்துக்காக அந்த பகுதியிலிருந்த பொலிசாரும், மேலும் சில பொலிசாரும் இந்த மிரட்டல்கள் தொடர்பாக நடவடிக்கைகள் துவங்கியுள்ளார்கள்.
பின்னர், சுமார் 10.35 மணியளவில், மருத்துவமனை வளாகத்தில் கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நடமாடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து உடனடியாக அங்கு ஆயுதமேந்திய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மருத்துவமனையும், அதன் அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் மூட பொலிசார் முடிவு செய்துள்ளார்கள்.
ஒருவர் கைது
மிரட்டல் விடுத்தது தொடர்பாக பொலிசார் தனது 40 வயதுகளிலிருக்கும் ஒருவரைக் கைது செய்துள்ளார்கள்.
ஆனால், கத்தியுடன் நடமாடியதாகக் கூறப்படும் நபர் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.