புராணக் கதை – பீஷ்மர் உணர்த்திய பொது தர்மம்!
பாரதப் போர் வெகு உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கம் கௌரவர்களின் பக்கபலமாக பீஷ்மர். அந்தப் பக்கம் பாண்டவர்களின் பக்கபலமாக ஸ்ரீகிருஷ்ணர்.
தவத்தில் சிறந்த பீஷ்மரின் பராக்கிரமம் யாவரும் அறிந்ததே. அவரை செயலிழக்க வைத்தால் மட்டுமே பாண்டவர்களின் வெற்றி உறுதி பெறும்.
இந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ணர் ஒரு தந்திர எண்ணத்துடன் உறங்கிக் கொண்டிருந்த பீஷ்மரின் கால்களை சிறிதும் சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கினார். உடன் சென்ற திரௌபதியும் அதேபோல் செய்ய, தன்னை வணங்கியது ஒரு பெண் என்று அறிந்த பீஷ்மர் திடுக்கிட்டு எழுந்து, ‘தீர்க்க சுமங்கலி பவ’ என ஆசீர்வதிக்கிறார். பின்னர்தான் அது திரௌபதி என பீஷ்மருக்குத் தெரிகிறது.
ஒன்றுமறியாதவர் போல் நின்று கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணரின் லீலை இது எனத் தெரிந்து கொண்டார் பீஷ்மர். இருப்பினும், ”கிருஷ்ணா, என் வாக்கு தர்மபடி நான் துரியோதனனையே வெல்ல வைக்க வேண்டும். இப்போது திரௌபதிக்கு தந்த வாக்கின்படி பாண்டவர்களும் நீண்ட ஆயுள் பெற வேண்டும். இந்த இரண்டில் நான் எந்த தருமத்தைக் காப்பாற்றினாலும் இன்னொன்றை உடைத்தே ஆக வேண்டும். நான் என்ன செய்ய? இக்கட்டில் என்னை மாட்டி விட்டுவிட்டாயே’ என்று புலம்பினார் பீஷ்மர்.
அப்போது முந்தைய நாள் யுத்தம் ஒன்றின்போது நடந்த நிகழ்வு அவர் மனதில் நிழலாடுகிறது. பீஷ்மர் தனது குரு என்பதால் அர்ஜுனன் ஒரு தயக்கத்துடனே அவருடன் போரிடுவதாக உணர்ந்த கிருஷ்ணர் கோபத்துடன், “உனக்கு நான் உபதேசித்த கீதை வீணாகிபோனதே. நானே பீஷ்மரைக் கொல்கிறேன்” என்றபடி தேரை விட்டு இறங்கி தேர்ச்சக்கரம் ஒன்றை கையில் ஏந்தியபடி பீஷ்மரை நோக்கி பாய்ந்தார்.
இதைக் கண்ட பீஷ்மர் கூட தனது இரு கரங்களையும் கூப்பி, “நான் யாரோ ஒருவரால் இறப்பதை விட, உனது கையால் இறப்பதே புண்ணியம். என்னைக் கொன்றுவிடு கிருஷ்ணா” என்கிறார். இந்த இடத்தில், ‘குருக்ஷேத்ரப் போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன்’ என்ற தனது வாக்கை ஸ்ரீகிருஷ்ணர் உடைத்ததை எண்ணிப் பார்க்கிறார் பீஷ்மர்.
உடனே பீஷ்மருக்கு சட்டென்று ஞானம் பிறந்தது. ‘தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல’ என்ற தெளிவு பிறக்கிறது. ‘இறைவனான கிருஷ்ணனே சூழல் முன்னிட்டு தர்மத்திற்காக தான் அளித்த வாக்கை உடைத்தானே. என் வாக்கு என்ற அகங்காரத்தினால்தானே இத்தனை மோசங்கள்’ என்பதை பீஷ்மர் உணர்ந்தார்.
‘என் வாக்கு என்பதை விட, தர்மம்தான் முக்கியம்’ எனும் ஞானம் அவருக்குப் பிறந்தது. இரு தர்மங்கள் ஒன்றுக்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மை தரும் பொது தர்மத்தையே கையிலெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டானது. பீஷ்மர் மனதில் இப்போது எந்த சலனமும் இல்லை. ஏனென்றால், அவருக்குத் தெளிவு பிறந்து விட்டது.