Nalam Nadi App: பள்ளி மாணவர்களுக்கு நலம் நாடி என்ற புதிய செயலி தொடக்கம்; ஏன், எதற்கு?

தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதிய செயலி வெளியிடப்பட்டது. சிறப்புத் திறன் கொண்ட மாணவர்களுக்காக ‘நலம் நாடி’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

அத்துடன் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளமும் தொடங்கி வைக்கப்பட்டது. அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை இனி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பல்வேறு நிகழ்வுகளை தொடங்கி வைத்த பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒருங்கிணைந்த கல்வி

பள்ளிகள் மாணவர்களின் மனம் மற்றும் உடல் நலனைக் கருத்தில்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் கொடுத்து, செயல்பட்டு வருகிறோம். அவர்களுக்கும் கல்வி அறிவை வழங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யாரையும் விட்டுவிடாமல் ஒருங்கிணைந்த கல்வியை அளிக்கும் வகையில் செயலி உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் நலம் நாடி என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் ஸ்பெஷல் எஜுகேட்டர்ஸ் எனப்படும் சிறப்பு கல்வியாளர்களும் செயலி உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். இத்தகைய குழந்தைகளிடத்தில் 21 வகையான குறைபாடுகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், யாருக்கு என்ன குறைபாடு உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் கற்பித்தல் நிகழ்த்தப்படும்.

நேரடி பணப் பரிமாற்றம்

’’கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை இனி நேரடியாக அவர்களது வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும். இதற்கு முன்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை மாநில அளவிலிருந்து மாவட்டங்களுக்கும் பிறகு அங்கிருந்து வட்டார அளவிலும் அனுப்பப்பட்டு அதன் பிறகு ஒவ்வொரு பள்ளிகளுக்காக அனுப்பப்பட்டு பிரித்துக் கொடுக்கப்பட்டு வந்தது.

இதனால் நீண்ட கால தாமதம் ஏற்பட்டு மாணவர்களுக்கு உரிய நேரத்தில் ஊக்கத்தொகை கிடைக்காத சூழ்நிலை நிலவி வந்தது. அதனைத் தவிர்க்கும் பொருட்டு, இனி நேரடியாக மாணவருடைய வங்கி கணக்கிலேயே உதவித்தொகை செலுத்தப்படும்.

எதற்காக?

வழக்கமாக கல்வி முறைகளுக்குள் கொண்டு வருவதற்காக, 10 முதல் 14 வயதுடைய மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.200 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை 2, 3 படிநிலைகளைக் கடந்துதான் மாணவர்களுக்குக் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது நேரடியாக எந்த கால தாமதமும் இல்லாமல் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளது.

இணையவழி குறைதீர் புலம்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் வட்டார, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாகவே கோரிக்கைகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் கோரிக்கை எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியாமல் இருந்தது. எனினும் தற்போது அரசுப் பள்ளிகளைப் போலவே, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள், நிர்வாகம் சார்ந்த கோரிக்கைகளை எளிய முறையில் தீர்த்து வைக்க, இணையவழி குறைதீர் புலம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கும் முன்னதாக, மாநிலத்தின் தேர்வு தேதிகளுக்கு ஏற்றவாறு அறிவிப்பது வழக்கம். மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவ்வாறு செய்யப்படும். அந்த வகையில், பொதுத் தேர்வு தேதிகளைத் தவிர்த்து தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு தேதிகளை அறிவிக்கும் என்று நம்புகிறேன்’’.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *