|

நந்தியே கோபுரமாய் அமைந்த அதிசய ஆலயம்!

திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வடக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது அருள்மிகு மாதவனேஸ்வரர் திருக்கோயில்.

இக்கோயில் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்திற்குப் பதிலாக சுதையாலான பெரிய ஒரு நந்தியே அமர்ந்துள்ளது. இது எங்கும் இல்லாத ஒரு அதிசய அமைப்பாகும். முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலமான திருமுருகன்பூண்டி, முருகப்பெருமானே விரும்பி வந்து சிவ வழிபாடு செய்த பெருமைக்குரியது மட்டுமின்றி, மேலும் பல புராண சிறப்புகளுடன் திகழ்கிறது. நவகிரக தலங்களில் கேது தலமான கீழ்பெரும்பள்ளம் அடுத்து கவனம் பெறும் இரண்டாவது தலம் இந்த மாதவனேஸ்வரர் கோயில்.

தேவர்களை ஏமாற்றி அமிர்தம் அருந்திய அசுரன் ஸ்வர்பானு, மகாவிஷ்ணுவின் சாபத்தினால் இராகு-கேதுவாகிய கதை அறிவோம். கேது பகவான் தனது சாபம் நீங்க, மாதவி வனமான இங்கு வந்து ஈசனையும் அம்பிகையையும் பூஜித்து வழிபட்டதால் இது கேதுவுக்கு உகந்ததாகிறது. இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் கேது பகவான் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். எனவே, கேது தோஷ பரிகாரத்திற்கு கீழ்பெரும்பள்ளம் செல்ல இயலாதவர்கள் இத்தலம் வந்து வழிபாடு செய்து பயன் பெறலாம். புராண காலத்தில் இத்தல இறைவனை துர்வாச முனிவர் வழிபட்டதற்கு சான்றாக துர்வாச தீர்த்தக் கிணறு அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் முல்லை வனமான இருந்த இத்தலத்தில் மாலாதரன் என்ற வேடனும் அவனது மனைவியும் காட்டில் பூத்த முல்லைப் பூக்களை எடுத்துத் தொடுத்து மாலையாக்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு பின் அதை வீசி விடுவது வழக்கமாம். ஒரு நாள் அவ்வாறு அவர்கள் வீசிய மாலை அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது தொடர்ந்து விழுந்தன என்றும் அறியாமல் அவர்கள் செய்த இந்த புண்ணிய பலத்தால் அவர்கள் இருவரும் மறுபிறவியில் மன்னர் வம்சத்தில் பிறந்து மணமுடித்து பிற்காலத்தில் இந்தக் கோயிலை கட்டியதாக தல வரலாறு வரலாறு கூறுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *