முழுக்க துபாயில் தயாரான நரேனின் ஹாரர் மிஸ்ட்ரி த்ரில்லர் திரைப்படம்
சித்திரம் பேசுதடியில் அறிமுகமாகி, லோகேஷ் கனகராஜின் கைதிவரை வில்லன், நாயகன் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் நரேன். அவற்றில் அஞ்சாதே, கத்துக்குட்டி போன்ற மறக்க முடியாத படங்களும் உண்டு. அவரது புதிய படம் ஒரு ஹாரர் மிஸ்ட்ரி த்ரில்லராக தயாராகியுள்ளது.
ஆட்டிசம் பாதித்த ஒரு இளைஞனுக்கு அமானுஷ்ய சத்தங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. அவை ஏன் கேட்கின்றன, எதற்காக கேட்கின்றன, அவற்றின் நோக்கம் என்ன என்பதை அந்த இளைஞன் தேட ஆரம்பிக்கும் போது பல புரியாத புதிர்களை அவன் கண்டடைய நேர்கிறது. அவை என்ன, அதற்கு அவன் கண்டடைந்த தீர்வு என்ன என்பது கதை. இதில் ஆட்டிசம் பாதித்த இளைஞனாக நரேன் நடித்துள்ளார். ஆத்மா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை துபாயைச் சேர்ந்த நஜீப் காதிரி தயாரித்துள்ளார். முழுக்க துபாயில் படமாக்கப்பட்டிருக்கும் முதல் தமிழ்ப் படம் இது.
ஆத்மாவை இயக்கியிருக்கும் சுகீத் ஓர் மலையாளி. அங்கு முக்கியமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2012 இல் இவர் மலையாளத்தில் இயக்கிய ஆர்டினரி திரைப்படம் அங்கு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழில் பார்த்திபன், விமல் நடிப்பில் கரு.பழனியப்பன் ஜன்னலோரம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அவரது இரண்டாவது படம் 3 டாட்ஸில் நரேன் வில்லனாக நடித்திருந்தார். அதன் பிறகு சுகீத் இயக்கிய படங்களில் மதுர நாரங்கா கவனம் பெற்றது. அவர் இயக்கியிருக்கும் முதல் தமிழ்ப் படம் ஆத்மா.
ராகேஷ் சங்கர் ஆத்மாவின் கதை, திரைக்கதையை எழுத, கே.சந்துரு வசனத்தை எழுதியுள்ளார். தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்த ஷ்ரத்தா ஷிவதாஸ் நாயகியாக நடித்துள்ளார். பால சரவணன், காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோருடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரீன் ஷீன் அகாட், கிறிஸ்டீன் பெண்டிசிகோ ஆகிய நடிகைகளும் ஆத்மாவில் நடித்துள்ளனர்.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.