தேசிய திரைப்பட விருதுகளின் பெயர் மாற்றம் – அரசியல் காரணமா?
இந்திய திரைத்துறையை ஊக்குவிக்கும்வகையில் 1954 ல் இருந்து தேசிய திரைப்பட விருதுகள் இந்திய திரைப்படங்களுக்கும், திரைப்பட கலைஞர்களுக்கும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. 1965 ம் ஆண்டிலிருந்து தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்துக்கு நர்கிஸ் தத் விருதும், 1984 ம் ஆண்டிலிருந்து சிறந்த அறிமுகப் படத்துக்கான இந்திராகாந்தி விருதும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த வருடம் வங்கப்பட உள்ள 70 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவ்விரு பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிறந்த அறிமுகப்படத்துக்கான இந்திராகாந்தி விருது, சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது என மாற்றப்பட்டுள்ளது. அதுபோல், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான நர்கிஸ் தத் விருது, தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திராகாந்தி, நர்கிஸ் தத் இருவரது பெயர்களையும் ஒன்றிய அரசு விருதுகளிலிருந்து நீக்கியுள்ளது.
நர்கிஸ் தத் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை, சமூகசேவகி. இவரது மதர் இந்தியா உள்ளிட்ட திரைப்படங்கள் புகழ்பெற்றவை. இவரது தந்தை அப்துல் ரஷீத், ஒரு பஞ்சாபி இந்து. இவர் இஸ்லாம் மதத்தைத் தழுவி மோகன்சந்த் உத்தம்சந்த் தியாகி என்ற தனது பெயரை அப்துல் ரஷீத் என மாற்றிக் கொண்டார். இவரது மனைவி – நர்கிஸின் அம்மா ஜத்தன்பாய் ஹுசைனின் பெற்றோர்கள் இந்துவாக இருந்து முஸ்லீமாக மாறியவர்கள். நர்கிஸ் இந்துவான சுனில் தத்தை திருமணம் செய்து, இந்துவாக மதம் மாறினார். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி நர்கிஸின் பெயர் சிறந்த தேசிய ஒருமைப்பாடு குறித்த திரைப்படத்துக்கு வைக்கப்பட்டது. இந்திராகாந்தி காங்கிரஸ்காரர் என்பதாலும், நர்கிஸ் தத் முஸ்லீம் பெயர் என்பதாலும் இவ்விரு பெயர்களும் தேசிய திரைப்பட விருதுகளிலிருந்து நீக்கப்பட்டு, புதிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
நர்கிஸ் தத் பெயரிலான விருது, தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என மாற்றப்பட்டதுடன் அதன் பரிசுத் தொகை 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது என பெயர் மாற்றப்பட்ட இந்திரகாந்தி விருதுக்கான பரிசுத் தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தாதா சாகேப் பால்கே விருதுத் தொகை 10 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறந்த படம், முதல் படம், முழுமையான பொழுதுபோக்கு வழங்கும் படம், இயக்கம் மற்றும் குழந்தைகள் படம் வகையில் வழங்கப்படும் சுவர்ண கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.3 லட்சமாகவும், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம், நடிப்பு பிரிவுகள், சிறந்த திரைக்கதை, இசை மற்றும் பிற பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் ரஜத் கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சிறந்த அனிமேஷன் படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் படம் ஆகியவை, சிறந்த ஏ.வி.ஜி.சி. படம் என்ற ஒரே விருதாக வழங்கப்படுகிறது. சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது, சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதாக மாற்றப்பட்டு பரிசுத்தொகை 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த இசை இயக்கத்துக்கான விருது சிறந்த பின்னணி இசை விருதாக மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு ஜூரி விருது நீக்கப்படுகிறது. சிறந்த குடும்ப படம் என்ற விருது நீக்கப்பட்டு, சிறந்த திரைக்கதை விருது அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த வருடம் நடக்கும் 70 வது தேசிய விருது விழாவிலிருந்து இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.