தேசிய அறிவியல் தினம் 2024: உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் விக்சித் பார்த் 2024!

இந்திய இயற்பியலாளர் சர் சி.வி. ராமன் 1928ஆம் ஆண்டு ராமன் விளைவைக் கண்டுபிடித்ததை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது தேசத்தின் வளர்ச்சிக்கு அறிவியலாளர்களின் பங்களிப்புகளைப் பாராட்டுவதற்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

1928ஆம் ஆண்டு ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 1930ஆம் ஆண்டு சர் சி. வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் 1986ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்பாடல் கவுன்சில் (NCSTC) ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடலாம் என முன்மொழிந்தது.

முதல் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்:

அதனை ஏற்று 1986ஆம் ஆண்டிலேயே பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டாலும், முதல் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் 1987ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்றுதான் கொண்டாடப்பட்டது. அப்போதிருந்து, இந்தியா முழுவதும் உள்ள கல்வி மற்றும் அறிவியல் சமூகங்களில் தேசிய அறிவியல் தினம் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.

தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அறிவியல் நிறுவனங்கள் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பல நோக்கங்களின் அடிப்படையில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கின்றன.

அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடு பற்றி புரியவைத்தல், அறிவியல் செயல்பாடுகளில் ஈடுபட இளைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் பொதுமக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது போன்ற பல காரணங்களை முன்வைத்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

2024 தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள்:

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் நாடு முழுவதும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடுகிறது. மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின்படி, இந்த ஆண்டு தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டங்கள் “விக்சித் பாரதத்திற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள்” (Indigenous Technologies for Viksit Bharat) என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெற உள்ளன.

உள்நாட்டுத் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதை ஊக்கப்படுத்துவதற்காக இந்தத் தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த புதுமைகளை உள்நாட்டிலேயே கண்டுபிடிப்பதை ஊக்குவிப்பதல் மற்றும் பாராட்டுதல், உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இந்திய அறிவியலாளர்களை பாராட்டி ஊக்குவித்தல், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் வகையில் உலக நாடுகளுடன் இணைந்து ஒத்துழைப்பை உருவாக்குவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த ஆண்டு அறிவியல் தின நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *