பாகிஸ்தானின் பிரதமராகும் நவாஸ் ஷெரிப்… இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?
பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது பொதுத்தேர்தல். 336 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தானில், 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்காகவும் ஒதுக்கப்பட்டதால், மீதமுள்ள 266 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், இம்ரான் கான் சிறையில் இருப்பதோடு, அவரது தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியும் போட்டியிட தடை விதிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சுயேச்சையாக களமிறங்கினர்.
அத்துடன், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் தேர்தலில் களமிறங்கின. கடந்த 8ஆம் தேதி வாக்குப்பதிவு சுமூகமாக முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டன. இம்ரான் கான் கட்சியினர் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றாலும், அவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டதால், ஆட்சி அமைக்க உரிமை கோர முடியவில்லை.
இந்த நிலையில், தனது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியே தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதாக நவாஸ் ஷெரீப் கூறியுள்ள நிலையில், அவருக்கு பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் பிரதராக மீண்டும் பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படும் நவாஸ் ஷெரீப், தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்தியா மீது வெறுப்பை விதைக்காமல், இந்தியாவின் சாதனைகளை சுட்டிக்காட்டியே பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் போலவே பொருளாதாரம் மற்றும் அறிவியல் துறைகளில் பாகிஸ்தானும் வளர்ச்சியை எட்டுவதற்காக, தனக்கு வாக்களிக்குமாறு நவாஸ் ஷெரீப் பிரச்சாரம் செய்தார். குறிப்பாக, இந்தியா நிலவில் கால் பாதித்து விட்டதை பாராட்டியதோடு, பாகிஸ்தான் வெளிநாடுகளிடம் பிச்சை எடுப்பதாகவும் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டு வந்தார். இதனால், அவர் மீண்டும் பிரதமர் ஆகும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உக்கிரம் கொஞ்சம் குறையும் என கருதப்படுகிறது.
அத்துடன், 2015ஆம் ஆண்டில் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது, ஆப்கானிஸ்தானில் இருந்து திடீர் பயணமாக லாகூருக்குச் சென்றார் பிரதமர் மோடி. அப்போது, அவரை இன்முகத்துடன் வரவேற்ற நவாஸ் ஷெரீப், தனது மாளிகைக்கும் அழைத்துச் சென்று உபசரித்தார். நவாஸ் ஷெரீப்பின் பிறந்த நாளன்று சென்ற பிரதமர் மோடி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, நவாஸ் ஷெரீப்பின் பேத்தியின் திருமணத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் நடந்த தனது பேத்தியின் திருமண நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பரிசளித்த ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்து வலம் வந்த நிகழ்வுகள் நினைவுக் கூரத்தக்கது.
2020இல் நவாஸ் ஷெரீப்பின் தாயார் மறைந்தபோது, அவருக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதிய பிரதமர் மோடி, 2015ஆம் ஆண்டு லாகூரில் சந்தித்தபோது பகிர்ந்து கொண்ட சில கருத்துகளை குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானின் மற்ற தலைவர்களை விட, நவாஸ் ஷெரீப் இந்தியா மீது மிதமான போக்கையே கடைப்பிடித்துள்ளார்.