LCU-வை ஓரம்கட்ட வருகிறது NCU! ஜெயிலருடன் இணைகிறார் கோலமாவு கோகிலா… நெல்சனின் வேறமாரி சம்பவம் லோடிங்
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து சாதித்த நடிகர், நடிகைகள் ஏராளமானோர் இருந்தாலும், இயக்குனர் வெகு சிலரே. அதில் முதன்முறையாக சின்னத்திரையில் இருந்து வந்தாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நெல்சன் திலீப்குமார். இவர் விஜய் டிவியில் ஜோடி, சூப்பர் சிங்கர், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை டைரக்ட் செய்து வந்த நிலையில், சிம்புவின் வேட்டை மன்னன் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
வேட்டை மன்னன் டிராப் ஆனதும் மீண்டும் சின்னத்திரைக்கே சென்ற நெல்சன், சுமார் 8 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார். முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும், அதற்கெல்லாம் சேர்ந்த்து வைத்து அவருக்கு கிடைத்த பரிசு தான் கோலமாவு கோகிலா. நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து அவர் இயக்கிய முதல் படமான இது விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.
கோலமாவு கோகிலா வெற்றிக்கு பின்னர் ரூ.100 கோடி வசூல் சாதனை நிகழ்த்திய டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய பீஸ்ட் படம் தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பின்னர் கடுமையாக ட்ரோல்களை சந்தித்த நெல்சன், அதற்கெல்லாம் தன்னுடைய ஜெயிலர் படத்தின் மூலம் தரமான பதிலடி கொடுத்தார். சூப்பர்ஸ்டாரை வைத்து செம்ம மாஸாக அவர் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்ததாக கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாம் பாகத்தை நெல்சன் இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படியே ரூட்டை மாற்றி ஜெயிலர் பக்கமே திரும்பி இருக்கிறார் நெல்சன். தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் வேலைகளில் அவர் பிசியாக இறங்கி இருக்கிறாராம். மேலும் இப்படத்தில் தன்னுடைய கோலமாவு கோகிலா படத்தின் நாயகி நயன்தாராவையும் நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளாராம்.
லோகேஷ் கனகராஜின் LCU-வை போல் நெல்சன் NCU கான்செப்ட்டை கையில் எடுத்திருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது. கோலமாவு கோகிலா படம் போதை பொருள் கடத்தலை மையமாக வைத்தும், ஜெயிலர் சிலைக்கடத்தலை மையமாக வைத்தும் எடுத்திருந்த நெல்சன் அவை இரண்டையும் இணைத்து ஜெயிலர் 2-வில் வேறமாரி சம்பவம் செய்ய காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.