கழுத்தை நெறிக்கு கடன்..சம்பளத்தை விட அதிகமாக EMI இருக்கிறதா? இதுதான் ஓரே வழி..!

ஒரு பொருளை வாங்க நினைக்கிறோம் ஆனால் முழு பணம் இல்லை என்ற சூழலில், EMI எனப்படும் மாதாந்திர தவணை தொகை செலுத்தும் நடைமுறை நமக்கு கை கொடுக்கிறது. வீடு, வாகனம், செல்போன்கள், லேப்டாப், வீட்டு உபயோகப் பொருட்கள் என பெரும்பாலானவற்றை EMI முறையில் வாங்கி பயன்படுத்துகிறோம்.

இவ்வாறு EMI மூலம் பொருட்களை வாங்கும் போது நமது வருமானம் அதற்கு ஏற்ப உள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் பின்னாளில் பெரிய அளவு பணச் சிக்கலும், மனச் சிக்கலும் ஏற்படும்.

வருமானத்தை விட அதிகமாகும் EMI: உதாரணத்திற்கு கார்த்திக் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் புரிகிறார். அவருக்கு மாத ஊதியம் ரூ.60,000 என வைத்துக் கொள்வோம். அவர் வீட்டுக்கடனுக்கான EMI தொகையாக மாதந்தோறும் ரூ.40,000 செலுத்த வேண்டும்.

கூடுதலாக, தனிநபர் கடனுக்கு ரூ.25,000 செலுத்துகிறார். இது போக கடன் செயலிகள் மூலம் பெற்ற கடனுக்கு மாதம் ரூ.20,000 செலுத்த வேண்டி இருக்கிறது. தற்போது அவரது வருமானம் ரூ.60,000, ஆனால் அவர் செலுத்தும் EMI ரூ.85,000 ஆக உள்ளது.

இந்த கடனை செலுத்த மற்றொரு கடன், அந்த கடனை செலுத்த வேறொரு கடன் என மாதந்தோறும் இதனை ஈடுகட்ட அல்லாடுகிறார். இந்த சூழ்நிலையில் இருந்து அவர் எப்படி வெளியே வரலாம் என்பதை பார்க்கலாம்.

பொதுவாகவே கடன் வாங்குவதற்கு முன் நமது வருமானம், எதிர்காலத்தில் நமது ஊதியம் உயருமா என்பனவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் கடன் தொகையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் பெரும் சிக்கலில் மாட்டுகின்றனர்.

உங்களது மாதாந்திர EMI தொகை வருமானத்தை விட அதிகமாக இருந்தால் முதலில் நீங்கள் மற்ற செலவினங்களை முடிந்த வரை குறைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பட்ஜெட் போட்டு தேவையற்ற செலவுகளை கண்காணித்து குறைத்திட வேண்டும்.

நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த கடன் எவ்வளவு? அதற்கான மாதாந்திர தொகை எவ்வளவு? என்பதை கணக்கிட வேண்டும்.

கடன் கழுத்தை நெறிப்பது போல இருந்தால் உங்களின் உள்ள சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்க முடியுமா என்பதை பாருங்கள். தங்கம், வாகனம் உள்ளிட்டவற்றை விற்க முடியுமா என்பதை பாருங்கள்.

அதே போல கடன்களை வரிசைப்படுத்தி முன்னுரிமை கொடுக்க வேண்டியது எதற்கு என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதாவது எந்த கடனை முதலில் அடைக்க வேண்டும் என்பதை அறிந்து அதனை முடித்து விடுங்கள். இந்த இடத்தில் அதிக வட்டி வசூலிக்கும் கடன்களை முதலில் அடைப்பது சிறந்த யோசனையாக இருக்கும்.

தங்கமோ அல்லது வாகனமோ அதை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு எவ்வளவு கடன்களை அடைக்க முடியுமோ அவ்வளவையும் அடைப்பது புத்திசாலித்தனம்.

பின்னர் உங்களுக்கு உள்ள கடன் தொகை மற்றும் EMI கணக்கீடு செய்தால் நிச்சயம் குறைந்திருக்கும். அதனை திட்டமிட்டு பட்ஜெட் போட்டு செலுத்திவிடுங்கள். பழைய கடன்களை முடிக்கும் வரை புதிதாக கடன்களை வாங்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஒரு வேளை உங்களின் தங்கம் இல்லை விற்று பணமாக்க எந்த பொருளும் இல்லை என்றால், நீங்கள் கடன் வாங்கிய வங்கிக்கு சென்று கடன் காலத்தை நீட்டிக்கலாம். இதன் மூலம் உங்கள் மாதாந்திர தவணை தொகை குறையும். நீங்கள் தற்காலிகமாக கடன் சுமையில் இருந்து விடுபடலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *