ஜூலை 7ம் தேதி நீட் முதுநிலைத் தேர்வு!
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு மாற்றாக, நெக்ஸ்ட்(NExT) தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தாண்டு வழக்கம்போல் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்பட உள்ளது.
‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் வரை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடரும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான ஒழுங்குமுறையை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், முன்னதாக மார்ச் 3ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, தற்போது ஜூலை 7ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஒவ்வொரு ஆண்டும் இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின்னர் இளநிலை நீட் தேர்வு நடத்தப்படும். இதுபோன்று, எம்.டி, எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு முதுநிலை நீட் தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.