Nellai Crime: காவல் நிலைய வாசலில் இளைஞர் வெட்டிப் படுகொலை .. நெல்லையில் பயங்கரம்!
நெல்லை, கருப்பந்துறை பகுதிகளில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலைய வாசலிலேயே கிறிஸ்துமஸ் நாளில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டசம்பவம் நடந்திருப்பது நெல்லை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி டவுன் அருகே உள்ள கருப்பந்துறை பகுதியைச் சேர்ந்தவா் ராஜூ. இவருக்கு 2 மகளும், கட்டட தொழிலாளியான சந்தியாகு (27) என்ற மகனும் உள்ளனா். சந்தியாகுவிற்கும் அதே பகுதியை சோ்ந்த இளைஞருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை கருப்பந்துறை புறக்காவல் நிலைய வாசலில் சந்தியாகு தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் சந்தியாகுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினா். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா். இதனையறிந்த அவரது உறவினா்கள் புறக்காவல் நிலையம் முன்பு திரண்டனா். தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனா் சரவணக்குமாா், ஜங்ஷன் சரக உதவி கமிஷனா் ராஜேஸ்வரன், ஆய்வாளா்கள் பொன்ராஜ், ரமேஷ் மற்றும் போலீசாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். போலீசார் சடலத்தை எடுக்க முயன்ற போது கொலையான தொழிலாளியின் உறவினா்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கருப்பந்துறை புறக்காவல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சந்தியாகுவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள், புறக்காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் கிடந்த அரிவாளை கைப்பற்றி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனா். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜங்ஷன் போலீசாா் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான சந்தியாகு, கருப்பந்துறை இந்திரா நகரை சேர்ந்த இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் சந்தியாகுவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது. கருப்பந்துறை பகுதிகளில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலைய வாசலிலேயே கிறிஸ்துமஸ் நாளில் இக்கொலை சம்பவம் நடந்திருப்பது நெல்லை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.