நேபாளம்: முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக திருமணத்தைப் பதிவுசெய்த லெஸ்பியன் ஜோடி!
மேற்கு நேபாளத்தில் உள்ள பர்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு தேவி ஸ்ரேஸ்தா. இவரது புனைபெயர் திப்தி.
சியாங்ஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரிதா குருங். இவர்கள் இருவரும் கடந்த 11ஆம் தேதி பர்டியா மாவட்டத்தின் ஜமுனா கிராமப்புற நகராட்சியில் தங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உடனே திருமணப் பதிவுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து தன்பாலினசேர்க்கை ஆர்வலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் பாபு பாண்டா, ‘தெற்காசியாவிலேயே முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக தங்கள் திருமணத்திற்காக பதிவு செய்த லெஸ்பியன் ஜோடி இவர்கள்தான்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், தெற்காசியாவிலேயே ஒரேபாலின திருமணத்தை முறையாக பதிவுசெய்த முதல் நாடாக நேபாளம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இதற்குமுன்பு, கடந்த ஆண்டு நேபாளத்தில் மாயா குருங் (வயது 35) என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே (வயது 27) என்ற சமபாலின சேர்க்கையாளருக்கும் இடையே சட்டப்பூர்வமாக நடைபெற்ற திருமணத்தைப் பதிவுசெய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.