Nerve Health: நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் இருக்க… தேவையான வைட்டமின்களும் உணவுகளும்!
நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான வைட்டமின்கள் இல்லாமல் போனால், நரம்புகள் பலவீனமடைகின்றன. நரம்பு பலவீனம் போன்ற பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகளை பெரும்பாலான மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. கவனிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் மேலும் தீவிரமடையும். நரம்புகளின் பலவீனத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், ஊட்டசத்தை பொறுத்தவரை சில வைட்டமின் குறைபாடுகள் இதற்கு காரணமாகின்றன. உடலின் நரம்புகள் பலவீனமடைய காரணமாக இருக்கும் வைட்டமின் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் எதிர்கால நரம்பியல் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உடலின் அனைத்து செயல்பாட்டிற்கும் நரம்பு மண்டலம் தான் ஆதாரம். இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் நரம்பு தளர்ச்சி. இதனால், உடல் நடுக்கம், சோர்வு, களைப்பு, தலைவலி, நிலைத்தடுமாற்றம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுகிறது. இந்நிலையில் பலவீனமான நரம்புகளுக்கு காரணமாகும் வைட்டமின் குறைபாடுகளையும், அதனை போக்கும் உணவுகளையும் (Health Tips) அறிந்து கொள்ளலாம்.
வைட்டமின்கள் பி1 என்னும் தியாமின், பி6 என்னும் பைரிடாக்சின் மற்றும் பி12 என்னும் கோபாலமின் ஆகியவற்றை உள்ளடக்கிய நியூரோட்ரோபிக் பி சத்துக்கள், நரம்பு மண்டலத்தில் கோஎன்சைம்களாக செயல்படுவதோடு, அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வைட்டமின் பி1 என்னும் தியாமின்
வைட்டமின் பி1 சத்து உடலில் அசிடைல்கோலின் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்ய துணைப்புரிகின்றது. இது ஒரு நரம்பியல் கடத்தியாக செயல்படுகிறது. வைட்டமின் பி1 அதாவது தியாமின் கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி நரம்பு செல்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் உடலின் அனைத்து நரம்புகளுடனும் அதன் இணைப்பை மேம்படுத்த உதவுகிறது. இந்த வைட்டமின் நரம்புகளை ஆரோக்கியமாகவும், வலுவாக செயல்படவும் உதவுகிறது. வைட்டமின் பி1 குறைபாட்டைப் போக்க, ஓட்ஸ் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிடுங்கள்.
வைட்டமின் B6 என்னும் பைரிடாக்சின்
வைட்டமின் பி6 அதாவது பைரிடாக்சின் வைட்டமின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் B6 உடலின் அனைத்து நரம்புகளையும் வலுப்படுத்த பயன்படுகிறது. மேலும், மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. உடலில் இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக வலிப்பு போன்றவை ஏற்படும். என எச்சரிக்கின்றனர். எனவே இந்த வைட்டமின் குறைபாட்டை தவிர்க்க முழு தானிய தானியங்கள், மீன் மற்றும் பருப்பு வகைகள் வாழைப்பழம், நிலக்கடலை, பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.
வைட்டமின் பி12 கோபாலமின்
நரம்புகளின் வலிமைக்கு வைட்டமின் பி12 ஊட்டசத்து இன்றியமையாதது. அவற்றின் குறைபாடு காரணமாக, நரம்பு தளர்ச்சி ஏற்படும். வைட்டமின் பி 12 இன் குறைபாடு காரணமாக நரம்புகள் சுருங்கும். இதன் காரணமாக நரம்புகளின் செயல்பாடு கடினமாகும். இதுமட்டுமின்றி, உடலில் அதன் குறைபாடு உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் அதிகரிக்கும், இதன் காரணமாக பல சிக்கல்கள் அதிகரிக்கும். இந்த வைட்டமின் சத்தினை பெற, முட்டை, இறைச்சி, காளான் மற்றும் கீரையை அதிகம் சாப்பிட வேண்டும்.
வைட்டமின் B9 என்னும் ஃபோலிக் அமிலம்
நரம்புகளுக்கு அவசியமான மற்றொரு வைட்டமின் சத்தான B9 என்னும் ஃபோலிக் அமிலம். கருவின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு இது அவசியம். அதனால் தான் கர்ப்பிணிப் பெண்கள் இதை அவசியம் உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பச்சை இலைக் காய்கறிகள், சோயாபீன்ஸ், கருப்பு பீன்ஸ் மற்றும் கிவி ஆகிய உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் வைட்டமின் B9 ஊட்டசத்தினை பெறலாம்.
வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ ஊட்டசத்தும் நரம்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத மற்றோரு ஊட்டசத்து. இதன் குறைபாடு நரம்புகளை பலவீனப்படுத்தும். காய்கறி எண்ணெய், பாதாம், வாதுமை பருப்புகள் ஆகியவற்றை தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் ஈ ஊட்டசத்தினை பெறலாம்.