உதயநிதியின் ரெட் ஜெயன்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்… காரணம் இதுதான்!

உதயநிதி நாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அவருக்கு இணையாக வேடம் ஏற்றவர் சந்தானம். படத்தின் மாபெரும் வெற்றிக்கு சந்தானம் ஒரு காரணமாக இருந்தார். அன்றிலிருந்து உதயநிதி, சந்தானம் இருவருக்குமிடையில் நல்ல நட்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்தனர். பிப்ரவரி 2 ஆம் தேதி படம் திரைக்கு வரும் எனவும் அறிவிப்பு வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து படத்தின் விளம்பரத்தை முடுக்கிவிட்டனர்.

பொங்கலை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்றை சந்தானம் வெளியிட்டார். அதில், சாமி இல்லைன்னு சுத்திட்டு இருந்த ராமசாமிதானே நீ என்று ஒரு குரல் கேட்க, சந்தானம், நான் அந்த ராமசாமி இல்லை என்று பதிலளிக்கும் காட்சி அதில் இடம்பெற்றிருந்தது. கடவுள் மறுப்பு கொள்கையைக் கொண்ட தந்தை பெரியார் என்கிற ஈ.வெ.ராமசாமியை குறிப்பிட்டே இந்த வசனத்தை படத்தில் வைத்திருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, அந்த காட்சியை தனது சமூகவலைத்தளப் பக்கத்திலிருந்து சந்தானம் நீக்கினார்.

அதேநேரம், படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் சந்தானம் சொன்ன அதே பதில் வார்த்தைகள் இடம்பெறும் வாசகத்துடன் படத்தின் போஸ்டரை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டது. இதனால் எரிச்சலான பெரியாரிஸ்ட் நெட்டிசன்கள் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தையும், உதயநிதியையும் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன் மோகன் ஜி.யின் பகாசுரன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கிய போதும் இது போன்ற எதிர்ப்பு கிளம்பியது.

சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி வடக்குப்பட்டி ராமசாமி படத்தை இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *