`ஒருபோதும் வாக்குவாதம் செய்ததில்லை’… 100 வயதைக் கடந்த தம்பதிகளின் க்யூட் லவ் ஸ்டோரி!
81 வருட திருமண வாழ்வை ஒன்றாகக் கழித்த தம்பதியினர், தங்களது நீண்ட கால திருமண வாழ்வின் ரகசியம் `ஒருபோதும் வாக்குவாதம் செய்யாதது’ என தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த டோரதி வால்டரின் தற்போதைய வயது 103. அவரின் கணவர் டிம்மின் வயது 102. இவர்கள் இருவரும் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனுக்கு போர் விமானங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒன்றாக பணிபுரிந்தபோது சந்தித்துள்ளனர்.
இவர்களுக்குள் மலர்ந்த காதல் 21 வயதில் திருமணத்தில் முடிந்தது. போருக்குப் பின், கென்டில் உள்ள ஒரு கிராமமான எல்ம்ஸ்டோனுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அவர்கள் ஒரு பழ பண்ணையை வாங்கி, பன்றிகளை வளர்த்து விவசாயம் செய்தனர். ஐரோப்பாவைச் சுற்றிப் பார்க்க படகு ஒன்றையும் வைத்திருந்தனர்.
விவசாயத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, விங்ஹாம் கிரீன் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்து 101 வயது வரை சுதந்திரமாக வாழ்ந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் `ஓக்ஃபீல்டு ஹவுஸ்’ என்ற கேர் ஹோமுக்கு சென்றனர்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், இரண்டு பேரக்குழந்தைகளும், மூன்று கொள்ளுப் பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர்.
இவர்களுக்குள் அரிதாகவே கருத்து வேறுபாடு வருமாம். சண்டைகள் வந்தாலும் சின்ன அளவிலேயே முடிந்துவிடும் என்கின்றனர். அதிகமாக டிராவல் செய்த இவர்கள், வாழ்வினை பெரும்பாலும் வெளியிலேயே கழித்ததாகக் கூறியுள்ளனர்.
தங்களது காதல் வாழ்க்கை குறித்து டிம் கூறுகையில், “நான் சவுத்தாம்ப்டனில் உள்ள சூப்பர்மரைனில் பயிற்சியாளராக இருந்ததால், அங்குள்ள குவாட்டர்ஸில் தங்கி இருந்தேன்.
அங்கிருந்து டோரதியைப் பார்க்க நான் சைக்கிளில் செல்வேன். போர் சமயம் என்பதால், நான் சென்றுகொண்டிருக்கும் சமயத்தில் விமானத் தாக்குதலுக்கான சைரன் ஒலிக்கும். நான் வண்டியை நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடம் தேடி நிற்பேன்.
சைரன் நின்றதும், நான் என் பைக்கில் திரும்பிச்சென்று டோரதியை சந்திப்பேன். எனது 95 வயது வரை வாகனம் ஓட்டுவதை நிறுத்தவில்லை.
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் திருப்தியாக இருந்தால், நீங்கள் நன்றாக இருப்பீர்கள். எங்களது நீண்ட கால திருமண வாழ்வின் ரகசியம் ‘ஒருபோதும் வாக்குவாதம் செய்யாதது’ என்று கூறியுள்ளார்.
தாத்தா, பாட்டி அவர்களின் வாழ்க்கை பற்றி சொல்வதைக் கேட்பது நன்றாக இருக்கும்… அது காதல் கதை என்றால் அல்டிமேட் தான்! தாத்தா, பாட்டியிடம் கதை கேட்ட அனுபவம் உண்டா?… கமென்ட்டில் சொல்லுங்கள்!