ஜன.15-ல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று திறக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் இந்தப் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, தமிழக முதல்வர் தொடர்ந்து பணிகள் குறித்த முன்னேற்றத்தை கேட்டு அறிந்து வருகிறார். இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே இந்தப் பேருந்து நிலையம் திறக்கின்ற சூழ்நிலை இருந்தும், தள்ளிப்போனதற்கான காரணம் மழை காலங்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி நின்றது. 1,200 மீட்டர் அளவுக்கு மழைநீர் வடிகால் அமைப்பு பணி நடந்தது. அந்தப் பணி தற்போது நிறைவுற்றிருக்கின்றது.

இந்தப் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது 2,310 பேருந்துகள் தினந்தோறும் இங்கிருந்து இயக்கப்படும். இதில் 840 பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் உள்ளடங்கும். இந்தப் பேருந்து நிலையத்தை ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் வரை பயன்படுத்த முடியும். இங்கு, பயணிகளுக்கு தேவையான உணவு வசதி, மருத்துவ சிகிச்சைக்கான வசதி, மருந்து மாத்திரைகளை வாங்க பார்மசி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல தீ தடுப்பு வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தடையற்ற மின்சார வசதி, பேருந்து நிலையங்களுக்கு தேவையான பெட்ரோல் – டீசல் நிலையம் உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளன.

இங்கு புறக் காவல் நிலையம் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதியளித்துள்ளார். எனவே, நிரந்தரமாக காவல் நிலையமும் அமைக்கப்படும். அதாவது, வரவிருக்கின்ற ஜனவரி 15-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் இந்தப் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார். பிறக்கின்ற புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியோடு இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கின்ற வகையில் திறப்பு விழா அமையும்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘முதலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வேலையை அந்த அம்மாவை (தமிழிசை) பார்க்கச் சொல்லுங்கள். பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம். அவர்களுக்கு இருக்கின்ற பணியை பார்க்க சொல்லுங்கள். அவர்களுடைய எதிர்காலத் திட்டம் தமிழகத்தில் எங்கேயாவது நாடாளுமன்ற தொகுதியில் நின்று போட்டியிட வேண்டும். நிச்சயமாக எங்கே போட்டியிட்டாலும், ஏற்கெனவே தமிழக மக்கள் தோல்வியைதான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள், மீண்டும் தோல்வியைத்தான் பரிசாக தருவார்கள். எனவே, புதுச்சேரிக்கு உண்டான கவர்னர், அந்த பொறுப்புக்கான பணியை மேற்கொள்ள கொள்ள வேண்டும். அதுதான் நல்லது’ என தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *