வீணாகும் உணவு பொருட்களில் புது பிஸ்னஸ் ஐடியா.. பலே பலே..!!
ஆங்கிலத்தில் “one man trash is another man’s treasure” என சொல்லப்படுவதுண்டு. அதாவது ஒருவருக்கு தேவையில்லை என குப்பையில் வீசக்கூடிய பொருள் மற்றொருவருக்கு தேவைப்படும் பொக்கிஷமாக இருக்கும் என்பது தான் இதன் அர்த்தம்.
இது உணவு பொருட்களுக்கு நிச்சயம் பொருந்தும். ஒருபக்கம் உணவை வீணாக்கும் மக்கள் என்றால் மறுபக்கம் பசியுடன் தவிக்கும் மக்கள். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்கியுள்ளது கொல்கத்தாவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப்.
இந்தியாவின் உணவு பிரச்னை: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருளில் கிட்டதட்ட 40% வீணாகிறது. அதே வேளையில் குளோபல் ஹங்கிரி இண்டெக்ஸ் எனப்படும் உலக பசி பட்டியலில் இந்தியாவில் 94ஆவது இடத்தில் உள்ளது.
ஆனால் அதே இந்தியாவில் தான் நாள்தோறும் லட்சக்கணக்கான டன் உணவுகள் வீணாகின்றன. உணவு பொருட்கள் மேலாண்மையில் போதிய விழிப்புணர்வு இல்லாதது, சேமிப்பு கிடங்குகள் பற்றாக்குறை ஆகியவற்றை இதற்கு காரணமாக கூறலாம்.
கவுரா தரும் தீர்வு என்ன?: கவுரா (Gauraa) என்பது கொல்கத்தாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். FMCG துறையில் உணவு பொருள்கள் வீணாகும் பிரச்னைக்கு தீர்வு அளிக்கிறது இந்த நிறுவனம்.
அதாவது உணவு பொருட்களுக்கு 2வது வாழ்வை கொடுக்கிறது இந்த நிறுவனம். எக்ஸ்பைரி காலம் நெருங்கி வரும் பொருட்களை வாங்கி 50% தள்ளுபடியில் மக்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதே போல பேக்கேஜூகள் சேதமடைந்ததால் விற்காமல் இருக்கும் பொருட்களை வாங்கி சீர் செய்து தள்ளுபடியில் வழங்குகின்றனர்.
பொதுவாக கடைகளில் குறைந்த வாழ்நாள் கொண்ட பொருட்களை வாங்கு குவித்து வைத்து , அவை எளிதில் காலாவதி ஆகிவிடுவதால் அவற்றை தூக்கி வீசுகின்றனர். இந்த இடைவெளியை சரி செய்வது தான் கவுராவின் நோக்கம்.
மிலிந்த் ஷா: கவுரா ஸ்டார்ட் அப் நிறுவனர் மிலிந்த் ஷா கொல்கத்தாவை சேர்ந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியரான இவர்,கல்லூரி முடித்த உடன் அமேசான் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
மக்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்த அவருக்கு இந்தியாவில் பொருள் விநியோக சங்கிலியில் உள்ள குறைபாடுகளால் ஆண்டுக்கு 69 மில்லியன் டன் உணவு வீணாகிறது என்பதை உணர்ந்தார். எனவே அதற்கு தீர்வு காணும் வகையில் கவுராவை தொடங்கினார்.
கவுராவின் செயல்பாடு என்ன?: கவுரா நிறுவனத்தில் 30 பேர் கொண்ட குழுவினர் கொல்கத்தாவில் 6,000 சதுர அடியில் ஒரு ஆலையை அமைத்து வேலை செய்து வருகின்றனர்.
ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஹல்திராம், பஜாஜ், ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு குறைந்த வாழ்நாள் கொண்ட பொருட்களை வாங்கி, காலாவதி தேதிக்குள் மக்களுக்கு தள்ளுபடி விலைக்கு தருகின்றனர்.