விப்ரோ நிறுவனத்திற்கு புதிய சிஇஓ.. அப்போ தியரி டெலாபோர்ட்..?
இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, தனது கன்சல்டிங் துறையில் பெரும் வளர்ச்சியை எதிர்பார்க்கும் வேளையில், சில வருடங்களுக்கு பெரும் தொகைக்கு கைப்பற்றிய கேப்கோ நிறுவனத்தின் தலைமை பதவிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
ஐடி துறையில் கோலோச்சி வரும் விப்ரோ நிறுவனம் கன்சல்டிங் துறையில் கால் பதிக்கும் நோக்கில் 2021ஆம் ஆண்டு கேப்கோ இன்க் நிறுவனத்தை கையகப்படுத்தியது. 1.45 பில்லியன் டாலர்களுக்கு விப்ரோ நிறுவனம் இதனை வாங்கியது.
கேப்கோ இன்க் நிறுவனத்தை வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியோ லாபமோ கிடைக்கவில்லை. எனவே நிறுவனத்தின் தலைமை பதவிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
விப்ரோ நிறுவனம் கேப்கோ இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆனி மேரி ரோவ்லேண்ட் செயல்படுவார் என அறிவித்துள்ளது. ஆனி மேரி ரோவ்லேண்ட் , இந்நிறுவனத்தின் பிரிட்டன் செயல்பாடுகளுக்கு தலைமை வகித்து வந்த நிலையில் தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. லான்ஸ் லெவியிடம் இருந்து ரோவ்லேண்ட் பொறுப்புகளை பெற்றுக் கொள்வார் என்றும், லான்ஸ் லெவி இனி ஆலோசகராக பணியாற்றுவார் என்றும் விப்ரோ அறிவித்துள்ளது.
ரோவ்லேண்ட் இனி விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயலாளர் அதிகாரியும் , மேலாண்மை இயக்குனருமான தியரி டெல போர்டேவிடம் நேரடியாக அறிக்கை வழங்குவார் என்றும், நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி உறுப்பினராக மாறுவார் என்றும் விப்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்கோ இன்க் நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள், ஊழியர்களிடம் அறிமுகமானவர் மற்றும் கன்சல்டிங் துறையில் ஆழமான அனுபவம் கொண்டவர் என்பதால், ரோவ்லேண்ட் இந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என விப்ரோவின் தலைமை செயல் அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விப்ரோ நிறுவனம் கன்சல்டிங் துறையில் பெரிய அளவில் கால் பதிக்க திட்டமிட்டு ரைசிங் சிஏஎஸ் குரூப்பை வாங்கியது. ஆனால் அது பெருமளவு லாபத்தை தரவில்லை. இந்த நிலையில் கேப்கோ நிறுவனத்தின் தலைமையை மாற்றி அமைத்துள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன்பு கேப்கோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்த ரோவ்லேண்ட் , துறை சார்ந்த தகவல் தொடர்புகளில் வல்லவராக இருப்பதால் அவரால் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என விப்ரோ தலைமை கருதுகிறது. தற்போது கேப்கோ நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு டிஜிட்டல், கன்சல்டிங் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.