புதிய EV கொள்கை.. டெஸ்லா கேட்ட வரி சலுகையை கொடுத்த மோடி அரசு..!!

இந்தியாவை உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஹப் ஆக மாற்றுவதற்கான இலக்குடன், மத்திய அரசு பொதுத்தேர்தல் நாள் அறிவிப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக புதிய எலக்ட்ரிக் வாகன திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கை மூலம் டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யவும், முதலீடு செய்யவும் கவர்ந்திழுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டெஸ்லா நீண்ட காலமாகக் கேட்டுவந்த வரி தள்ளுபடியும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசி புதிய எலக்ட்ரிக் வாகன திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளை குறைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த வரி சலுகையைப் பெற வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் குறைந்தது 500 மில்லியன் டாலர் அதாவது 4,150 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
இதுமட்டும் அல்லாமல் சில பல முக்கிய கண்டிஷன்களையும் வைத்துள்ளது மத்திய அரசு, முதலீடு செய்யும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இதை செய்தும் பட்சத்தில் தான் கார்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படும்.
மத்திய அரசின் இந்த முடிவு டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இந்தியாவின் நிலைப்பாட்டையும் வலியுறுத்துகிறது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் அதிநவீன உற்பத்தி தொழில்நுட்பத்தையும் இதன் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும்.
“இந்த திட்டம், நம்பகமான உலகளாவிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களை இந்திய எலக்ட்ரிக் வாகன துறையில் முதலீடு செய்ய கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் “ஆத்மநிர்பார் பாரத்” திட்டம் கூடுதல் வலிமை பெறும்.