மு.க.ஸ்டாலின் அரசு உருவாக்கிய புதிய அரசு நிறுவனம் TNGEC.. அவசியமான முடிவு..!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் என இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனல் மின் உற்பத்தியிலும் மற்றொன்று விநியோகத்திலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்து முடியும். இதன் மூலம் வருமானம், கடன் ஆகியவற்றைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும். இது மட்டும் அல்லாமல் மாநிலத்தின் மின்சாரத் துறையில் நிதி நிலையை மேம்படுத்தவும் இந்த முயற்சி பெரிய அளவில் உதவும்.

ஆனால், தமிழ்நாடு அரசின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவிற்கும், வளர்ந்து வரும் தொழிற்சந்தைக்கு மத்தியில் நிலையான வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தப் பசுமை எரிசக்தியில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்காகவே, தமிழ்நாடு அரசு கூடுதலாகத் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (Tamil Nadu Green Energy Corporation Limited) என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனத்தை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையுடன் (TNEDA) இணைக்கப்பட்டுள்ளது என எரிசக்தி துறை செயலர் பீலா ராஜேஷ் ஜனவரி 24 அன்று வெளியிட்ட உத்தரவின்படி வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது.

Tamil Nadu Green Energy Corporation நிறுவனம் 2013 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் செயல்படும். மேலும் கிரீன் எனர்ஜி துறைக்குத் தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டதன் மூலம் பசுமை எரிசக்திக்கான பிரத்தியேகே முதலீடுகள், நிதி உதவிகளைத் தமிழ்நாடு அரசு எளிதாகக் கவர முடியும்.

இந்த நிறுவனத்தின் வாயிலாக நீர் மின் உற்பத்தி, லோசார், காற்றாலை போன்ற பசுமை மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான முதலீடுகளையும் ஈர்க்க முடியும்.

Tangedco இந்தியாவின் மின் வணிகத் தரவரிசையில் ஐந்தாவது இடத்திலும், வருவாயில் மூன்றாவது இடத்திலும், எரிசக்தி விற்பனையில் நான்காவது இடத்திலும் இருக்கிறது. தற்போதைய மறுசீரமைப்பு மூலம் செயல்பாட்டில் இருக்கும் சிக்கல்கள் பெரிய அளவில் தீர்க்கப்படும்.

Tangedco கடனைக் குறைப்பதற்கும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் அரசுக்குச் சொந்தமான மின்சாரப் பயன்பாட்டைப் பிரிப்பது குறித்த ஆய்வை நடத்த 2023ல் முன்னணி ஆலோசனை நிறுவனமான EY இந்தியா தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியானது.

இந்த அணுகுமுறையைப் பின்பற்றிப் பல விநியோக நிறுவனங்களை நிறுவுவது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்துகொண்டு மின் உற்பத்திக்கு ஒரு நிறுவனமும் மின் பகிர்மானத்திற்கு ஒரு நிறுவனம் என இரு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதோடு கிரீன் எனர்ஜிக்கு என ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *