“இந்தியா” கூட்டணியில் புது பஞ்சாயத்து? ஒரு பக்கம் மம்தா, இன்னொரு பக்கம் நிதிஷ் கடுங்கோபம்! என்னாச்சு
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் வர வேண்டும் என்பதையே பலரும் வலியுறுத்தி வந்தனர். அதன்படி நாட்டின் பல எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணியை உருவாக்கின.
இதற்கு இந்தியா என்றும் பெயரிடப்பட்டன. லோக்சபா தேர்தல் அடுத்தாண்டு நடக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள இந்த இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ச்சியாகக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்தியா கூட்டணி: இருப்பினும், ஏற்கனவே இந்தியா கூட்டணியில் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரடியாகப் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு போன் செய்து பேசியுள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவகாரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்ற போதிலும் கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சிறு குழப்பம் ஏற்பட்ட நிலையில், அது குறித்துப் பேசியிருப்பார்கள் எனத் தெரிகிறது.
‘இந்தியா’ கூட்டணி சலசலப்பு: அய்யா கோபமா இருக்கீங்க போல? நிதிஷ்குமாருக்கு போன் போட்ட ராகுல் காந்தி!
இந்தியா கூட்டணியை உருவாக்க முக்கிய நபர்களில் ஒருவர் நிதிஷ்குமார். சொல்லப்போனால் பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட முதல் கூட்டம் கூட பீகார் தலைநகர் பாட்னாவில் தான் நடைபெற்றது. சொல்லப்போனால் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்றும் கூட சொல்லப்பட்டது.
போன் செய்த ராகுல்: ஆனால், கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழியலாம் எனக் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த நிதிஷ்குமார் அங்கேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்தச் சூழலில் தான் நிதிஷ் குமாருக்கு நேரடியாக போன் போட்ட ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து விளக்கியதாகத் தெரிகிறது.
உண்மையில், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் நிதீஷ் குமாருக்கும் கடந்த காலங்களிலும் சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டன. ஆனால், அது பெரிதாகவில்லை. ஆனால், கடந்த புதன்கிழமை நடந்த மோதல் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானது. நிதிஷ்குமார் இந்தியில் பேசிய நிலையில், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறு திமுக தரப்பில் கேட்க.. “இந்தி தேசிய மொழி அனைவரும் கற்க வேண்டும்” என சம்பந்தமே இல்லாமல் நிதிஷ் குமார் கோபமடைந்ததாகத் தெரிகிறது.
மம்தா, அகிலேஷும் கோபம்: மேலும், கடந்த நவம்பர் மாதம் நடந்த 5 மாநில தேர்தலில் தெலுங்கானா தவிர மற்ற மாநிலங்களில், குறிப்பாக இந்தி ஹார்ட் லேண்டான சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. இந்த விவகாரத்திலும் நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ் குமார் மட்டுமின்றி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி ஆகியவை கூட இதில் காங்கிரஸைச் சாடியிருந்தது.
புதன்கிழமை டெல்லியில் நடந்த இந்நிக கூட்டத்தில் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தனர், பாஜகவைத் தோற்கடிக்க கார்கே சிறந்த நபராக இருப்பார் என்பது அவர்கள் கருத்து. இருப்பினும், இதை உடனடியாக மறுத்த கார்கே, தேர்தலில் வெல்வது மட்டுமே முக்கியம் என்றும் யார் பிரதமர் என்பதை பின்னால் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தனர்.
பிரதமர் பதவி: நிதிஷ்குமார் பொதுவெளியில் பேசும் போது தனக்குப் பிரதமர் பதவி மீது எல்லாம் ஆசை இல்லை என்றே தொடர்ந்து கூறி வந்துள்ளார். ஆனால், தனிப்பட்ட முறையில் அவருக்குப் பிரதமர் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கார்கே முன்மொழியப்பட்ட போது அவர் கோபமடைந்துள்ளார். இதையடுத்தே ராகுல் காந்தி நேரடியாக அவருக்கு போன் செய்து பேசியிருக்கிறார்.