பிரான்சுக்கு புதிய பிரதமர்: ஜனாதிபதி மேக்ரான் திட்டம்…
பிரான்சுக்கு புதிய பிரதமரை அறிவிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அறிவிக்கப்படலாம் என தகவல்…
பிரான்சுக்கு புதிய பிரதமரை அறிவிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முடிவு செய்துள்ளதாகவும், இன்று அவர் புதிய பிரதமர் தொடர்பில் அறிவிப்பு வெளியிடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சைப் பொருத்தவரை, பொதுவான கொள்கைகளை முடிவு செய்பவர் ஜனாதிபதி என்றாலும், அரசின் அன்றாட நிர்வாகத்தை கவனிப்பது பிரதமர்தான். ஆகவே, நாட்டில் என்ன பிரச்சினை வந்தாலும் அவர் தலைதான் உருளும்.
மேக்ரான் கொண்டு வர திட்டமிட்ட புலம்பெயர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்ப்பை சந்தித்ததிலிருந்தே, பிரதமரான எலிசபெத் போர்னின் (62)நிலைமை ஆட்டம் கண்டிருந்தது.
அடுத்த பிரதமர் யார்?
இப்படிப்பட்ட ஒரு சூழலில், நேற்றிரவு, ஜனாதிபதி மேக்ரான், பிரதமர் எலிசபெத்தை சந்தித்தார். வடக்கு பிரான்சில் காணப்படும் பெருவெள்ளப் பிரச்சினை மற்றும் உறையவைக்கும் குளிர் தொடர்பில் விவாதிக்க இருவரும் சந்தித்துப் பேசியதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியது.
ஆனால், உண்மையில் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கவே இருவரும் சந்தித்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
அப்படி அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுமானால், பாதுகாப்புத்துறை அமைச்சரான Sebastien Lecornu (33) அல்லது, முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சரும், மேக்ரானுக்கு நெருக்கமானவருமான Julien Denormandie (43) புதிய பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலிசபெத், வெறும் 20 மாதங்கள் மட்டுமே பிரதமர் பதவியில் நீடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.