புது ட்விஸ்ட்..! தலைவர் மாற்றம் இல்லை..!
56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கோத்ரா பகுதி மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் பார்மர், பிரபல வைர வியாபாரி கோவிந்த் தோலக்கியா, மாநில பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் மாயங்க் நாயக் ஆகிய நால்வரும் காந்திநகரில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பாஜக தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவிற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பை செலுத்தும் வகையில் மாநிலங்களவை எம்.பி பதவி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் பாஜக தேசிய தலைவர் நாற்காலியில் அமரப் போகும் புதிய நபர் யார்? இந்த சூழலில் மீண்டும் அமித் ஷாவிற்கு வாய்ப்பளிக்கப்படுமா? இல்லை மூத்த தலைவர்கள் யாருக்காவது வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் பாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா செயல்பட்டு வரும் நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 2 நாட்கள் நடந்த தேசிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜவை பொறுத்தவரை தேசிய தலைவர் பதவி காலம் என்பது 2 ஆண்டுகளாகும். அந்த வகையில் முதல் 2 ஆண்டு காலத்தை ஜேபி நட்டா கடந்த 2022ல் நிறைவு செய்தார். அதன்பிறகு அவர் மீண்டும் பாஜக தேசிய தலைவராக தேர்வு செய்யபப்ட்டார். இந்த பதவிக்காலம் என்பது கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அமித்ஷா ஒப்புதலுடன் அவர் அந்த பதவியில் தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜேபி நட்டாவின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்ய பாஜகவின் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரும் ஜேபி நட்டாவின் பாஜக தேசிய தலைவர் பதவி என்பது ஜுன் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.