புத்தாண்டு.. பொங்கல்.. தீபாவளி.. 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 28 வரை.. விஜயகாந்தின் புகைப்படங்கள்…!
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தில் கட்சியினரை சந்தித்து விஜயகாந்த் வாழ்த்து தெரிவிப்பதோடு, ரூ.100 தாளையும் வழங்குவது வழக்கம். அதனை அவருடன் எடுத்த புகைப்படம் போல தொண்டர்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பர். உடல்நிலை சரியில்லாத காரணமாக 2023 புதுவருடம் அன்றுதொண்டர்களை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும், புத்தாண்டு அன்று காலை சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தார் விஜயகாந்த். முகக்கவசம் அணிந்து நாற்காலியில் அமர்ந்தபடி தொண்டர்களுக்கு கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர், தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரேமலதா விஜயகாந்த் மூலம் புத்தம் புதிய நூறு ரூபாய் தாளை வழங்கினார்.
2023ல் விஜயகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்து நடிகர்கள் சத்யராஜ், தியாகு ஆகியோர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
விஜயகாந்தை மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஜனவரி 31ல் நேரில் சந்தித்துள்ளார். அவர்கள் அன்புடன் பேசிக்கொண்ட படம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி மற்றும் மகன்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
ஆகஸ்ட் 25ல் தனது பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த்-க்கு ஏராளமான கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பொருளாளர் கார்த்தி, நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
கையில் மத்தாப்பூ உடன் விஜயகாந்த் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினார்.
சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கேப்டனிடம் ஆசிர்வாதம் வாங்கினார் பிரேமலதா விக்ஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கூட தவிர்த்து வந்தார். மேலும் அவ்வப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பப்பது.
இந்நிலையில் கடந்த மாதம் நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் டிசம்பர் 11ஆம் தேதி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 26ம் தேதி அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக இன்று காலை காலமானார். அப்போது அவரது உடலை இல்லத்திற்கு கொண்டு வந்தபோது அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கதறி அழுதார்.
மறைந்த விஜயகாந்தின் உடலை வைக்க கொண்டுவரப்பட்ட சவப்பெட்டி. வீட்டு வாசலில் காத்திருந்த தொண்டர்கள் விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டதாகவும், மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும் இன்று காலமானார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக தேமுதிக கொடி அவரது இல்லத்திலும் தேமுதிக அலுவலகத்திலும் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.