அடுத்த சம்பவம்.. ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் தனி சட்டமா? ஜெய் ஷாவை கேள்வி கேட்ட முன்னாள் வீரர்!

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து இர்பான் பதான் எழுப்பியுள்ள கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தப் பட்டியல் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது. முதல்முறையாக வருடாந்திர ஒப்பந்தத்தில் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட விரும்பாத வீரர்கள் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இருவருமே இந்திய அணிக்காக அனைத்து வடிவங்களிலும் விளையாடி வந்தனர். ஆனால் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ தேர்வு குழு இரு தரப்பும் நேரடியாக கேட்டுக் கொண்ட போது கூட இரு வீரர்களும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் பொய் கூறிவிட்டு ஐபிஎல் தொடருக்கு தயாராகியது நிர்வாகிகளால் ரசிக்கப்படவில்லை. பிசிசிஐ-ன் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் வீரர் இர்பான் பதான் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் திறமையான கிரிக்கெட் வீரர்கள். நிச்சயம் கூடுதல் வலிமையுடன் கம்பேக் கொடுப்பார்கள் என்று நம்பலாம். ஆனால் ஹர்திக் பாண்டியா போன்ற வீர்ரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பாமல் இருக்கிறார்.

இந்திய அணிக்காக விளையாடாமல் இருக்கும் போது ஹர்திக் பாண்டியாவும் விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட உள்ளூர் ஒயிட் பால் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பாரா? ஒருவேளை பிசிசிஐ விதிமுறைகள் அனைவருக்கும் சமமாக இல்லையென்றால், இந்திய கிரிக்கெட் எதனை நினைத்து நடவடிக்கைகள் எடுக்கிறதோ, அதனை கடைசி வரை சாதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா பெரும்பாலான இரு தரப்பு போட்டிகளில் கூட பங்கேற்காமல் இருந்து வருகிறார். ஐசிசி தொடர்கள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடுவதை மட்டுமே ஹர்திக் பாண்டியா நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் சூழலில், பிசிசிஐயின் நடவடிக்கை ஹர்திக் பாண்டியா மீது இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *