வானிலை மையம் எச்சரித்ததா சொல்றீங்களே நிர்மலா சீதாராமன்.. அப்போ இது என்ன? பாயிண்ட் பிடித்த எம்.பி!

திசைதிருப்பும் கருத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாபஸ் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.

சு.வெங்கடேசன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

தமிழக மழை வெள்ள நிவாரணம் குறித்து நேற்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் பிரஸ்மீட் நடத்திய போது கூறிய கருத்துக்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் பெருகி வருகின்றன.

இதனிடையே சு.வெங்கடேசன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் விடுத்துள்ள பதிவு வருமாறு;

”நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்படியென்றால் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க ரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்தி வைத்தாரே எப்படி? ”

”கொட்டும் பேய் மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி? அன்றைய தினம் கடும்மழையால் தென் மாவட்டங்களில் பல ரயில்களை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என இரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? ”

”வானிலை மையத்தின் இவ்வளவுப் பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு? தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரமதமரா? அல்லது என்னவானாலும் என்ன.. தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே! ”

”மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள். இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுபெறுங்கள்.” இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *